சென்னை: கரோனா வைரஸ், நிபா வைரஸ் உள்பட விலங்குகளிடம் இருந்து பரவும் நோய்களின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய நோய்களால் பொது சுகாதாரத்திற்கு கடும் பாதிப்பு உண்டாகிறது. இச்சவாலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் தலைமையில் ’ஒருங்கிணைந்த நலன் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயல்திட்டங்களை வகுக்கும் குழு (One Health and Climate Change Strategic Committee) ஒன்றை உருவாக்கி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், “மனித நலன் என்பது விலங்குகள், தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் நலன் சார்ந்ததே என்கிற One Health அணுகுமுறையைத் தமிழ்நாடு அரசு பின்பற்ற வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
மேலும், அதில் வரும் சவால்களைச் சமாளிக்கும் வகையில், முக்கியமான ஏழு துறைகள், மாசுக்கட்டுப்பாடு வாரியம், இந்திய விலங்கியல் ஆய்வு நிறுவனம், சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் அடங்கிய 23 பேர் கொண்ட ’ஒருங்கிணைந்த நலன் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான செயல்திட்டங்களை வகுக்கும் குழு’ குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானியும் மருத்துவருமான சவுமியா சுவாமிநாதன், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் இயக்குநர் கல்பனா பாலகிருஷ்ணன், யுனிசெஃபின் அனன்யா கோஷல், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த கோ.சுந்தர்ராஜன் ஆகியோரும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.