தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தமிழ்நாடு அமைதியாக இருக்காது'... துணைவேந்தர்கள் நியமனத்தில் யூ.ஜி.சி.-யின் புதிய விதிக்கு முதல்வர் எதிர்ப்பு! - UGC NEW RULE

துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்று யூ.ஜி.சி. புதிய விதியை கொண்டு வந்ததற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்,யூஜிசி (கோப்புப்படம்)
முதல்வர் ஸ்டாலின்,யூஜிசி (கோப்புப்படம்) (credit - @mkstalin x account and ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2025, 4:38 PM IST

Updated : Jan 7, 2025, 5:05 PM IST

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன விவகாரத்தில் மாநில அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே இழுபறி நீடித்து வரும் நிலையில், துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே நியமிப்பார் என்று யூ.ஜி.சி. புதிய விதியை கொண்டு வந்துள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார் என்று யூ.ஜி.சி. வெளியிட்டுள்ள புதிய விதிகளின் வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த குழுவின் தலைவராக ஆளுநர் பரிந்துரைப்பவரும், உறுப்பினராக யூஜிசி பரிந்துரைப்பவரும், மற்றொரு உறுப்பினராக பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவரும் இருப்பார் என்று யூ.ஜி.சி.யின் புதிய விதியில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையால் மாநில அரசு பரிந்துரைக்கும் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே முடிவு செய்வார் என்று யு.ஜி.சி.யின் வரைவு அறிக்கைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு எதிர்வினையாற்றியுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின், '' துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்களுக்குப் பரந்த அதிகாரங்களை வழங்குவது மற்றும் கல்விப்புலம் சாராதோரும் துணைவேந்தேர் ஆகலாம் எனும் பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய விதிமுறைகள் கூட்டாட்சியியல் மற்றும் மாநில உரிமைகளுக்கு எதிரான நேரடித் தாக்குதல் ஆகும். ஒன்றிய பா.ஜ.க. அரசின் இந்த எதேச்சாதிகார முடிவு அதிகாரக் குவியலுக்கு வழிவகுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் சிறுமைப்படுத்துவதாக உள்ளது.

இதையும் படிங்க:HMPV வைரஸ்: சுவாச நோய்களுக்கான கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் - மத்திய அரசு அலெர்ட்!

மக்களால் தேர்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும், பா.ஜ.க. அரசின் கைப்பாவையாகச் செயல்படும் ஆளுநர்கள் கைக்கு அது செல்லக்கூடாது. தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களை நாட்டிலேயே அதிக அளவில் கொண்டுள்ள தமிழ்நாடு நமது கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பறிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்காது.

அரசியலமைப்புச் சட்டப்படி கல்வி ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளது. எனவே, தன்னிச்சையாக இந்தப் புதிய விதிமுறைகள் தொடர்பான அறிவிக்கையை யு.ஜி.சி. வெளியிட்டது அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானதாகும். இந்த வரம்புமீறிய செயலை ஏற்க முடியாது. இதற்கு எதிராக, சட்டரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் போராட்டத்தைத் தமிழ்நாடு முன்னெடுக்கும்'' என எக்ஸ் பக்கத்தில் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

Last Updated : Jan 7, 2025, 5:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details