சென்னை: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுவது போல், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேர்ந்திருக்கும் மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ரூ.1,000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஐம்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற முதலமைச்சர், பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், தமிழில் 100 சதவீதம் மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் பாராட்டினார்.
அதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய முதலமைச்சர், “மாணவியர்களுக்கு மாதா மாதம் ரூ.1,000 வழங்குகிற மற்றொரு திட்டம் முக்கியமானதாக இருக்கின்றது. அதுதான், "புதுமைப்பெண் திட்டம்" (Pudhumai Penn Scheme). எனக்கு மாணவிகளிடம் இருந்து வந்த கடிதங்களாக இருந்தாலும், தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் சந்தித்த மாணவியர்களாக இருந்தாலும் சரி, பலரும் இந்த திட்டத்தை பாராட்டினர். மாணவிகள் தங்களின் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் நம்பியும், எதிர்பார்த்தும் இருக்க வேண்டிய நிலை இல்லை எனவும், இந்த திட்டம் தங்களுக்கு மிகவும் உதவியாக உள்ளதாகவும் கூறினர்.
அந்த மகிழ்ச்சி மாணவர்கள் முகத்திலும் ஏற்பட வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்குகின்ற "தமிழ்ப்புதல்வன் திட்டம்" (Tamil Pudhalvan Scheme) செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தேன். அதன்படி, கல்லூரியில் சேர்ந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர் கல்லூரி சென்றவுடனே அவர்களது வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும். அதாவது, வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து அந்த ரூ.1,000 வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்!