சென்னை:மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ்(87) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர் ரஜினிகாந்த், தமிழிசை சவுந்தரராஜன், டிடிவி தினகரன் ஆகியோர் ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில்,"பத்ம விபூஷன் ராமோஜி ராவ் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. ராமோஜி குழுமத்தின் தொலைநோக்கு நிறுவனர். ஊடகம், பத்திரிகை மற்றும் திரைப்படத்துறையில் அவரது பங்கு என்றும் நிலைத்து இருக்கும். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவரது நலம் விரும்பிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
சி.பி.ராதாகிருஷ்ணன்:ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கள் பதிவில், "ராமோஜி ராவ் மறைவை அறிந்து ஆழ்ந்த வருத்தமடைந்தேன். இந்திய ஊடகம் மற்றும் சினிமாத் துறையில் தனது மகத்தான பங்களிப்புகளால் புரட்சியை ஏற்படுத்திய ஒரு ஜாம்பவான். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.