தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னைக்கு ரெட் அலர்ட்.. தலைமைச் செயலாளர் முருகானந்தம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்! - CHIEF SECRETARY MURUGANANDAM

சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் விவரித்துள்ளார்.

தலைமைச் செயலாளர் முருகானந்தம்
தலைமைச் செயலாளர் முருகானந்தம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2024, 5:58 PM IST

சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வரும் 16, 17 ஆகிய தேதிகளில் சென்னையில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள சூழலில் முன்னேற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் நேரில் ஆய்வு செய்தார்.

இதில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் அமுதா, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோர் சென்னை வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலசந்திரன், தனியார் வானிலை கணிப்பாளர் பிரதீப் ஜான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைமை செயலாளர் முருகானந்தம் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் கூறியதாவது, “நாளை அதிக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக 16,17 ஆகிய தேதிகளில் மிக அதிகமான மழை இருக்கும் என தெரிவித்திருக்கிறார்கள். இதன் அடிப்படையில், நாளை சென்னை மற்றும் 3சுற்று வட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களின் விடுமுறை குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுப்பார்கள்.

வீட்டிலிருந்து பணியாற்ற அறிவுரை:முக்கிய பகுதிகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சென்னையை பொறுத்தவரை படகுகள் தயார் நிலையில் உள்ளன. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வட கடலோரத்தில் இருந்து நாகை வரை மாவட்ட ஆட்சியர்கள் தயார் நிலையில் உள்ளனர். 16, 17 தேதிகளில் ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்ற நபர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வளர்ச்சிப் பணிகள்:சென்னையில் எங்கெல்லாம் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேவையோ அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் 300 இடங்கள் தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னை உட்பட சுற்றுவட்ட 3 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த முறை எங்கெல்லாம் தண்ணீர் தேங்கியுள்ளது என்பதனை பார்த்து அதற்கேற்ற வளர்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றுவதற்காக பம்புகளும் தயார் நிலையில் உள்ளது.

இதையும் படிங்க:மழை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்; பொதுமக்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்..!

மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளால் ஆங்காங்கே குழிகள் உள்ளது. அந்த குழிகளை மூடுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறையும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளை மாவட்ட ஆட்சியர்கள் கண்டறிந்துள்ளனர். தேவைப்படும்போது அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

மின்சார துறைக்கும் போதுமான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் தயார் நிலையில் உள்ளார்கள்.நீர் நிலைகளில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்று ஆய்வு செய்துள்ளோம். அதை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். செம்பரம்பாக்கத்தில் 33 சதவீதம் தான் தண்ணீர் இருக்கிறது. இருப்பினும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தேவைக்கு ஏற்ப ஏரியில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்படும்.

எவ்வளவு மழை பெய்யும் என கணிக்க முடியாது. அதிகப்படியான மழை பெய்தால் அதை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தாழ்வான பகுதிகளில் கூடுதல் கவனம் தேவை. உதாரணமாக வேளச்சேரி பகுதியில் அதிக தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளது. அங்கெல்லாம் அதிகப்படியான பம்ப்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 30 ஆம் தேதியில் இருந்து மெட்ரோ மற்றும் மின்சாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பாக சாலைகள் நடைபெற்று வரும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் 300 இடங்களில் சமைப்பதற்கான இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களை தங்க வைப்பதற்கு போதுமான அளவிலான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று முருகானந்தம் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details