சென்னை: தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு, காலிப்பணியிடங்கள் நிரப்புதல் ஆகியவை மீதான அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என தலைமைச் செயலகச் சங்கம் வலியறுத்தியுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்க தலைவர் கு.வெங்கடேசன், இணை செயலாளர் லெனின் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, “நவம்பர் 8ஆம் தேதி நடந்த, பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றார். அதில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை, நிதி சாராத கோரிக்கைகளை மட்டுமே தேர்தலுக்குள் நிறைவேற்ற முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தகவல் பரவியது.
இது தமிழ்நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் இடையே பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது கானல் நீராகப் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 2021-ஆம் ஆண்டில் திமுக தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், கொரோனா பேரிடர், முந்தைய ஆட்சியாளர்களால் விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடி, ஒன்றிய அரசின் பாரபட்சமான நிதி ஒதுக்கீட்டினையும் சமாளித்து நிதி மேலாண்மையினை மேற்கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க:பழைய ஓய்வூதியத் திட்டம்; தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதலமைச்சருக்கு கடிதம்!
இதில், முன்னான் முதலமைச்சர் கருணாநிதியால் நடைமுறைப்படுத்தப்பட்ட சரண் விடுப்பு உரிமையானது காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது. பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு சரண் விடுப்பு சலுகைதான் பெரிய நிவாரணமாக இருந்தது. இது இனிமேல் ஒரு போதும் வழங்க இயலாது என்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. அரசின் நடவடிக்கைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.