சென்னை:தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த மாதம் 27ம் தேதி 17 நாட்கள் அரசுமுறை பயணமாக சென்ற முதல்வர் ஸ்டாலின் சிகாகோ விமானநிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை சென்னைக்கு வந்தடைந்தார்.
சென்னைக்கு வந்தடைந்த முதல்வரை வரவேற்க ஏராளமான திமுக தொண்டர்கள் விமான நிலைய சாலையில் இன்று காலை முதலே வழிநெடுக காத்திருந்தனர்.
தொடர்ந்து சென்னை வந்திறங்கிய முதல்வர் ஸ்டாலின் அளித்த பேட்டியில், அமெரிக்க பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், இந்த பயணத்தின் மூலம் ரூ.7,618 கோடிக்கு 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாகவும், இதன்மூலம் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
மேலும், உலகின் புகழ்பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் சந்திப்பு நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அந்த வகையில், சான் பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்களுடனும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடனும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
தொடர்ந்து அமெரிக்க பயணத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளை குறித்து விவரித்த முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது; உலகெங்கிலும் இருக்கக்கூடிய முதலீட்டாளர்கள் முதலீடு மேற்கொள்ள விரும்புகின்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என பல்வேறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது.
கடந்த 29 தேதி சான் பிரான்சிஸ்கோ நகரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், நிறுவனத் தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு ட்ரில்லியன் டாலர் பொருளாதார என்ற இலக்கை நோக்கி முன்னேறுவதற்கான பணிகளில், பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாடு அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த நிறுவனங்களை நான் கேட்டுக் கொண்டேன்.
ஃபோடு நிறுவனம்: இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டிற்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர். இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் தமிழ்நாட்டில் 30 ஆண்டு காலமாக செயல்பட்டு தவிர்க்க இயலாத காரணத்தினால் சில சூழ்நிலைகளால் உற்பத்தியை நிறுத்தி வைத்த ஃபோடு நிறுவனம் எங்கள் வேண்டுகோளை ஏற்று, சென்னை மறைமலைநகர் தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க முன்வந்துள்ளனர்.
அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்ன சொன்னார்கள் என்றால், கமிட்டி போட்டு உறுப்பினர்களிடம் பேசிவிட்டு சொல்கிறோம் என்று கூறினார்கள். அதற்குப் பிறகு விருப்பத்தை நாங்கள் அதிகமாக தெரிவித்த காரணத்தினால், அனைத்து வசதிகளையும் செய்து தருகிறோம் என்ற நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு, ''சரி நீங்க போங்க இரண்டு நாட்களுக்குள் அனுப்பி வைக்கிறோம்.. அதற்கான மகிழ்ச்சியான செய்தியை நிச்சயம் அனுப்புவோம்'' என்று கூறினார்கள். நாங்கள் சிகாகோவில் ஏறி விமானத்தில் உட்கார்ந்த போது, அவர்கள் (ஃபோடு) அதற்கான அறிவிப்பை வெளியிட்டதாக செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைந்தோம்.