தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாக தெரிந்த ஆளுநர் விழா மேடையில் கண்டிக்காதது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் அடுக்கடுக்கான கேள்வி - TAMILTHAI VAZHTHU ISSUE

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில், முதலமைச்சர் கண்டத்திற்கு ஆளுநர் பதிலளித்திருந்த நிலையில், ஆளுநருக்கு மீண்டும் சில கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

ஆளுநர் ஆர் என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஆளுநர் ஆர் என் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 18, 2024, 11:04 PM IST

சென்னை: இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்" என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநர் அளித்த விளக்கம் தொடர்பாக முதலமைச்சர் பல்வேறு கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளார்.

  • ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாக பாடப்படாத தமிழ்த்தாய் வாழ்த்தை உடனே மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா? அதனை ஏன் செய்யவில்லை?
  • ‘பெருமையோடு துல்லியமாகப் பாடுவேன்’ என விளக்கம் கொடுக்கும் ஆளுநர் - உரிமையோடு அந்த இடத்திலேயே தவற்றைச் சுட்டிக்காட்டியிருக்கலாமே! சரியாகப் பாடும்படி பணித்திருக்கலாமே? துல்லியமாக அந்தச் செயலை நீங்கள் செய்திருந்தால் எதிர்வினை ஏற்பட்டிருக்குமா?
  • ’ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தைத் தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது’ எனச் சொல்லியிருக்கிறீர்கள்.
  • ஆளுநர் அவர்களே, தமிழ் எங்கள் இனம். அது எங்கள் உயிர்மூச்சு. தமிழ்மொழியைக் காக்க உயிர்களை நெருப்புக்குக் கொடுத்தவர்கள் தமிழர்கள். முதல் அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்திற்கு அடிகோலியதோடு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் வரலாறுகளைத் தாங்கி நிற்கும் மண் இது. இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!
  • ’பாஜக அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவித் தமிழ்மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தைத் தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது. ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழைக் கொண்டு சென்றார் பிரதமர் மோடி’ எனச் சொல்லியிருக்கிறார் ஆளுநர்.
  • தமிழைத் தலையில் தூக்கிப் போற்றுவதாக நீங்கள் கூறும் மோடி அரசு தமிழ்மொழிக்கு என்ன செய்தது?
  • கடந்த 2013-2014 முதல் 2022 -2023-ஆம் ஆண்டு வரை சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2029 கோடி, திருப்பதியில் உள்ள தேசிய சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகத்துக்கு ரூ.406 கோடி என மொத்தம் ரூ.2435 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • இது கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு செலவிடப்பட்டதைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதே காலகட்டத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக வெறும் ரூ.167 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதாவது சம்ஸ்கிருதத்திற்குச் செலவிடப்பட்டதில் வெறும் 7 விழுக்காடு மட்டுமே தமிழுக்கு ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமில்ல, கடந்த காலத்தில் நீங்கள் பேசியது நினைவிருக்கிறதா?
  • ”தமிழ்நாடு என்ற பெயரைப் புறக்கணித்து, தமிழகம் என்று அழைக்க வேண்டும்” என்றும்; “திராவிடம் என்ற கோட்பாடே பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியதுதான்” என்றும் கூறியதை மறக்க முடியுமா?
  • 'திராவிட மாடல் காலாவதியான கொள்கை' என ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டி அளித்த வெறுப்புதானே, இன்றைக்குத் தமிழ்த்தாய் வாழ்த்து வரை வந்து நிற்கிறது?
  • தமிழை நேசிப்பதாக இப்போது சொல்லும் நீங்கள் முன்பு, திருவள்ளுவர் படத்தைக் காவி நிறத்தில் ஏன் வெளியிட்டீர்கள்? எனச் சொல்ல முடியுமா?
  • தமிழ் மீது மத்திய பாஜக அரசுக்குப் பற்றிருப்பது உண்மையானால், உலகப் பொதுமறையான திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்காமல் உங்களைத் தடுப்பது எது?
  • பிரதமர் மோடி அறிமுகப்படுத்தும் திட்டங்கள், தொடர்வண்டிகள், முன்வைக்கும் முழக்கங்கள் என ‘எங்கும் இந்தி – எதிலும் இந்தி’ என்ற கொள்கையுடன் இந்தியைத் திணிப்பது நீங்கள்தான்.
  • ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து அரசியல்சட்ட நெறிமுறைகளை மறந்து நாள்தோறும் அரசியல் பேசுவதும், ஆளுநர் மாளிகையை அரசியல் அலுவலகமாக மாற்றியதும் - திராவிட இனத்தையே கொச்சைப்படுத்திப் பேசி வருவதும் எந்த வகை அரசியல் நாகரிகம்? எந்த வகை கண்ணியம்?
  • சட்டப்பேரவையில் நீங்கள் படிக்க வேண்டிய ஆளுநர் உரையில் கூட திராவிட மாடல், தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற பெயர்களைத் தவிர்த்தவர் தானே நீங்கள்?
  • உங்கள் வரலாறு இப்படி இருக்கும்போது, திராவிடநல்திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்?
  • அரசியலமைப்புச் சட்டப் பதவியில் சட்டப்புத்தகத்தின்படி பொறுப்பேற்றவர், வகுப்புவாதக் கும்பலின் கைப்பாவையாக மாறி, பிளவுவாத அழிவு விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
  • நீங்கள் ஆளுநர் பதவியில் தொடர நினைத்தால், பிளவுவாத சக்திகளிடமிருந்து விடுவித்துக்கொண்டு, அரசியல்சட்ட நெறிமுறைகளின்படி கடமையை ஆற்ற வேண்டும்" என உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

ABOUT THE AUTHOR

...view details