தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு!

TN Govt DA Hike: தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள்

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 3:39 PM IST

சென்னை:இது தொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிதி நிலைமைக்கு ஏற்ப படிப்படியாக நிறைவேற்றுவதில் இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை முதலமைச்சர் கனிவுடன் பரிசீலித்து, 01.07.2023 முதல் ஒன்றிய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும்போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதைப் பின்பற்றி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கிட அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

அவ்வகையில், ஒன்றிய அரசுப் பணியாளர்களுக்கு 01.01.2024 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 01.01.2024 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 இலட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். எனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்" இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details