சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். இதற்குப் பல்வேறு தரப்பைச் சார்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வேளான் பட்ஜெட் குறித்துக் கூறியதாவது, "திமுக ஆட்சிக்கு வந்தால் 2500 ரூபாய் ஒரு குவின்டால் நெல்லுக்கு வழங்கப்படும், ஒரு மெட்ரிக் டன் கரும்புக்கு ஆதார விலை 4000 வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த விவசாயிகளை மறந்து விடுகிறார்கள்.
2023ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டு 3.50 லட்சம் ஏக்கர் நிலம் தண்ணீர் இல்லாமல் சேதம் அடைந்து உள்ளது. இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு தொகை இன்னும் கிடைக்கவில்லை. இதனை, அரசு கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம், ஆனால், இன்னும் அது நிறைவேற்றப்படவில்லை.
திமுக அரசு பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆகியும் குருவைச் சாகுபடி விவசாயிகள் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. இனி வரும் காலத்தில் அவர்களைச் சேர்க்க வேண்டும், அவர்களுக்குப் பயிர்க் காப்பீடு திட்டத்தில் நிவாரணம் வழங்க வேண்டும்.
சம்பா தாளடி விவசாயிகள் கர்நாடகத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் கிடைக்க வேண்டிய தண்ணீரைப் பெறாததால் பயிர் விளைச்சல் பாதிக்கிறது. உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விட வேண்டும். காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்து விட்டதால் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கவில்லை.
சம்பா, தாளடி பயிரிட்டு வீணான ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். பயிர்க் காப்பீடு திட்டம் மூலம் இழப்பீடு கிடைத்திருந்தால் 84,000 கிடைத்து இருக்கும். அதிமுக ஆட்சியில் கரும்பு விவசாயிகள் கரும்பு முழுவதும் கொள்முதல் செய்யப்பட்டது" என தெரிவித்தார்.