சென்னை:2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று, வினா - விடை நேரத்தில் பேரவை உறுப்பினர் காந்திராஜன் 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை' திட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்த திட்டத்தில் விண்ணப்பித்து விடுபட்ட தகுதியான பெண்களுக்கு உரிமைத் தொகை கிடைக்கவும், புதிதாக விண்ணப்பிக்கவும் 3 மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வினா விடை நேரத்தில், பேரவை உறுப்பினர் காந்தி ராஜன் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மகளிர் எண்ணிக்கையை தெரிவிக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேடசந்தூர் தொகுதியில் 62 ஆயிரம் பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் 4,00,897 பேர் மகளிர் உரிமை தொகை பெற்று வருகின்றனர் என்று பதில் அளித்தார்.