கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், '' திமுக ஆட்சியில் பால் விலை, மின் கட்டணம், சொத்துவரி என அத்தியாவசிய சேவைகள் அனைத்துக்கும் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
'தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு'
வழக்கமாக திமுக ஆட்சி கால கட்டங்களில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு இருந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்கள் நகரத் தொடங்கி இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்காக இஸ்லாமிய மக்களை சந்தித்து ஆதரவு கேட்க கோவையில் இருந்து பயணத்தை துவங்கி இருக்கிறேன்.
'பாஜகவும், திமுகவும் மறைமுக அணி'
கோவையில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஜமாத்துகளை சந்தித்து பேசியுள்ளோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் இஸ்லாமிய மக்கள் தவறு செய்து விட்டதை உணர்ந்து இருக்கின்றனர். பாஜகவும், திமுகவும் மறைமுகமாக ஒரே அணியில் இருந்து செயல்படுவதை புரிந்து கொண்டுள்ளனர். எனவே 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்து இருக்கின்றனர்.