"திமுக, அதிமுகவிற்கு வாக்களிப்பது வாக்குகளைக் குப்பையில் போடுவதற்கு சமம்" - ஜி.கே.வாசன்! சேலம்: தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர்,"தமிழகத்தில் மக்கள் விரோத அரசு நடக்கிறது. அனைத்து தரப்பு மக்கள் மீதும் வரி சுமையை திமுக அரசு ஏற்றி வைத்துள்ளது. மின்சார வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தண்ணீர் வரி உயர்வு உள்ளிட்டவற்றை உயர்த்தியதே, வாக்களித்த மக்களுக்கு திமுக அளித்த பரிசு. இனி மக்கள் அளிக்கும் வாக்கு மக்களின் வளர்ச்சிக்கான வாக்காக இருக்க வேண்டும்.
விவசாயிகள் பாதிக்காத வகையில், சேலம் விமான நிலைய விரிவாக்க பணிகள் செய்ய வேண்டும். காவிரி உபரிநீர் திட்டப் பணிகள் முறையாக விரிவுபடுத்த வேண்டும். சேலத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக நீக்க வேண்டும்.
சேலம் - ஓமலூர் சாலையில் அமைந்துள்ள காலாவதியான சுங்கச்சாவடியை நீக்க வேண்டும். சேலம் இரும்பாலை பணிகளுக்காக எடுக்கப்பட்டுப் பயன்படுத்தப்படாமல் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். மீண்டும் மோடி பிரதமரானால் பல்வேறு மத்திய அரசின் தொழில்களுக்கு உயிர் கொடுத்து வேலைவாய்ப்பு அதிகரிக்கப்படும்.
சேலத்தில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா உருவாக்கப்படும். மலைவாழ் மக்களுக்கு மேலும் நிதி உதவிகள் வழங்கப்படும். சேலம் மாவட்டத்தின் வருங்கால வளர்ச்சிக்கு திமுக, அதிமுகவிற்கு மறந்து கூட வாக்களித்து விடாதீர்கள். திமுகவும், அதிமுகவுக்கும் அளிக்கும் வாக்குக் குப்பைத் தொட்டியில் போடுவதற்குச் சமமானது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் பாஜகவை எதிர்க்கட்சியாகப் பார்க்காமல் எதிரி கட்சி போலப் பார்ப்பார்கள். பிரதமரையோ, மத்திய அமைச்சர்களையோ தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக நேரில் சந்திக்கக் கூட திமுக, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயங்குவார்கள். எனவே திமுக, அதிமுக வேட்பாளர்களைப் புறம் தள்ள வேண்டும்.
நல்லவர்கள் எல்லாம் ஓர் அணியில் சேர்ந்துள்ளோம். இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி 2026ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் வலுவான ஆட்சி அமைக்கும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேர்தலுக்குப் பிறகு நாடு வல்லரசாகும். நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். பொருளாதாரம் மேலும் உயரும்" என்று பேசினார்.
இதையும் படிங்க:திருவள்ளூர் அருகே பாலவேடு கிராம மக்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு! - Lok Sabha Election Boycott