தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேவாட் கொள்ளையனை பொறி வைத்து தூக்கிய போலீஸ்.. தீரன் பட பாணியில் அதிரடி! - HARYANA MEWAT ROBBER ARREST

ஹரியானாவில் பதுங்கியிருந்த குரோம்பேட்டை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மேவாட் கொள்ளையனை தனிப்படை போலீசார் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இர்ஃபான் கான்
கைது செய்யப்பட்ட இர்ஃபான் கான் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 8, 2024, 10:46 AM IST

Updated : Oct 8, 2024, 10:57 AM IST

சென்னை:குரோம்பேட்டையில் கடைகளின் சுவரில் துளையிட்டு 60க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ரூ.15 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்த மேவாட் கொள்ளையனை ஹரியானா மாநிலத்தில் வைத்து தனிப்படை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மனித நேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் தமிம் அன்சாரி செல்போன் உதிரிப் பாகங்கள் கடையும், அதே கட்சியைச் சேர்ந்த மாநில இளைஞரணி செயலாளர் மன்சூர் அலிகான் துணிக்கடையும் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை மூடிவிட்டுச்சென்ற நிலையில், மறுநாள் காலை மீண்டும் கடைக்கு வந்து பார்த்த போது, இருவரது கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே வந்த மர்ம நபர்கள் 60க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் ரூ.15 லட்சம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சடைந்த கடை உரிமையாளர்கள் அன்சாரி மற்றும் மன்சூர் ஆகியோர் குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில், போலீசார் கைரேகை நிபுணர்களுடன் சம்பவம் நடைபெற்ற கடைகளுக்குச் சென்று அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் இரண்டு நபர்கள் கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே சென்று கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும், அதில் ஒரு நபர் ஹரியானா மாநிலத்தின் மேவாட் பகுதியைச் சேர்ந்த கொள்ளையன் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தாம்பரம் காவல் உதவி ஆணையர் நெல்சன் தலைமையில் இரண்டு தனிபடைகள் அமைத்து போலீசார் அவர்களை தேடி வந்தனர். தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக தனிப்படையினர் ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதையும் படிங்க:சீர்காழி அருகே போலி பதிவு எண் கொண்ட காரில் வலம் வந்த கும்பல்.. சதி திட்டமா? கூலிப்படை? - போலீஸ் விசாரணை!

இந்தநிலையில், செல்போன் சிக்னலை வைத்து நேற்று முன் தினம் இர்ஃபான் கான் (35) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் போலீசாரை சுற்றி வளைத்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, போலீசார் துப்பாக்கியை காட்டி இர்ஃபான் கானை அங்கிருந்து பாதுகாப்பாக டெல்லி அழைத்து வந்து, விமானம் மூலம் நேற்று சென்னை அழைத்து வந்தனர்.

அதனைத்தொடர்ந்து, குரோம்பேட்டை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் தொடர் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில், ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியைச் சேர்ந்தவர் இர்ஃபான் கான் (35) என்பது தெரியவந்தது. மேலும், இவர் கடந்த ஆண்டு டிசம்பரில் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போன் கடை ஒன்றில் இதே பாணியில் சுவரில் துளையிட்டு, 200க்கும் மேற்பட்ட செல்போன்களை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து சிறையில் இருக்கும் பொழுது இர்ஃபான் கான், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு கொள்ளையன் முகமது அலி என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற திட்டம் தீட்டியுள்ளனர். மேலும், இவர்கள் குரோம்பேட்டை பகுதியில் உள்ள செல்போன் கடை மற்றும் துணிக் கடையில் துளையிட்டு திருடி சென்றதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

மேலும், இவர்கள் இந்த கொள்ளை சம்பவத்திற்கு சிறிய சுத்தியல் மற்றும் உளி ஆகியவற்றை பயன்படுத்தியே சுவற்றில் துளையிட்டு உள்ளே சென்று லாவகமாகத் திருடிக் கொண்டு தப்பி செல்வதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட இர்ஃபான் கானிடம் இருந்து நான்கு செல்போன்கள், இரண்டு ஐபாடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொள்ளை அடிக்கப்பட்ட மற்ற 54 செல்போன்களையும் முகமது அலி கொண்டு சென்று விட்டதாக இர்ஃபான்கான் தெரிவித்துள்ளார். இதையடுத்து முகமது அலியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கைது செய்யப்பட்ட இர்பான் கான் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : Oct 8, 2024, 10:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details