சென்னை:தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மார்ச் 6ஆம் தேதி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பணம் கொண்டு வந்த நவீன், பெருமாள், சதீஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இது நெல்லை நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான பணம் என தெரிவித்தனர். இதையடுத்து இந்த பணம் சென்னையில் பல்வேறு நபர்களிடமிருந்து கைமாறியதாக கூறப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய நபர்கள் அனைவரையும் நேரில் அழைத்து தாம்பரம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்தனர்.
இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொள்வதற்காக, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்கின் ஆவணங்களைப் பெற்றிருந்த நிலையில், பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் பணத்தைக் கொண்டு சென்றதாக கைது செய்யப்பட்ட சதீஷ், நவீன், பெருமாள் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரின் உதவியாளர்கள் ஆசைதம்பி, ஜெய்சங்கர் உள்ளிட்டவர்களிடம் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.