தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜிஎஸ்டி பக்கமா போயிடாதீங்க... செங்கல்பட்டுக்கு வேற ரூட்ட புடிங்க! தாம்பரம் காவல்துறை எச்சரிக்கை!

தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள், ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் பெருங்களத்துரை கடப்பதற்காக முக்கிய அறிவுறுத்தலை தாம்பரம் மாநகர காவல் துறை வழங்கியுள்ளது.

ஜிஎஸ்டி சாலை
ஜிஎஸ்டி சாலை (credit - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 8 hours ago

Updated : 7 hours ago

சென்னை: நாடு முழுவதும் நாளை (அக்.31) தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக, தமிழ்நாட்டில் தீபாவளி மறுநாள் அரசு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும், தீபாவளிக்கு முந்தைய தினமான இன்றும் பள்ளி, கல்லூரிகள் அரை நாள் மட்டும் இயங்கும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், நேற்று இரவு முதல் இருந்தே சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி படை எடுத்து வருகின்றனர். ஏற்கனவே சென்னையில் இருந்து சுமார் 5 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களிலிருந்து சுமார் 4,000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தீபாவளியை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால், சென்னையில் பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் இன்று பணியை முடித்துவிட்டு மாலை முதல் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என கூறப்படுகிறது.

ஸ்தம்பிக்கும் ஜிஎஸ்டி சாலை:இதனால் சென்னை நகரில் இருந்து தாங்கள் சொந்த வாகனங்களில் செல்பர்கள், அரசு பேருந்துகளில் செல்பவர்கள் ஒரே நேரத்தில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், கூடுவாஞ்சேரி மறைமலை நகர், ஜி.எஸ்.டி சாலையில் சென்றால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் சாலையிலேயே சிக்கி அணிவகுத்து நின்றுவிடும்.

இதனால் சொந்த வாகனங்களில் சென்னையிலிருந்து தங்கள் ஊர்களுக்கு செல்லும் பொதுமக்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து விட்டு மற்ற வழித்தடங்களை பயன்படுத்தி செங்கல்பட்டு சென்று விடலாம் என போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

தாம்பரம் காவல்துறை எச்சரிக்கை: இதுகுறித்து என்ன மாதிரியான அறிவுறுத்தல்கள், நடவடிக்கைகள் காவல்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தாம்பரம் மாநகர காவல் துறை அதிகாரி விக்டரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ''தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட ஜிஎஸ்டி சாலை மற்றும் கிளாம்பாக்கம், வண்டலூர், பெருங்களத்தூர், கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை பகுதிகளில் சுமார் 2,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், எந்தப் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என கண்டறிந்து அந்த இடங்களில் சுமார் 500 போக்குவரத்து காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:"கொலை செய்யட்டும்.. முழு செலவையும் நாம பாத்துக்கலாம்" - ஆம்ஸ்ட்ராங் வழக்கில் ரவுடி நாகேந்திரன் அளித்த பகீர் வாக்குமூலம்!

மேலும், பொது மக்களுக்கு எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் பயணம் செய்வதற்கு 24 மணி நேரமும் போக்குவரத்துக் காவலர்கள், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையினர் விரைந்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில் வழி தெரியாமல் வரும்போது மக்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்று எந்தப் பகுதிக்கு செல்ல வேண்டும் எனக் கேட்டறிந்து, அந்தப் பேருந்து நிற்கும் இடங்களுக்கு அவர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லவும் சில காவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடுமையான நெரிசல் இருக்கும்: மேலும், இன்று பணி நாள் என்பதால் இன்று மாலையில் இருந்து தான் லட்சக்கணக்கான மக்கள் அரசு பேருந்துகளிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ தங்கள் ஊர்களுக்கு புறப்பட்டு செல்வார்கள் என்பதால் மாலை நேரத்தில் இருந்து இரவு நேரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கும். இதனால் அந்த நேரத்தில் விழிப்புடன் போக்குவரத்துக் காவலர்கள் பணியில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பெருங்களத்தூர், இரும்புலியூர் பகுதியை இணைக்கும் ஜிஎஸ்டி சாலையில் பாலம் விரிவாக்கம் செய்யப்படுவதால், அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் போடப்பட்டு நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே, சென்னை நகருக்குள் இருந்து தங்கள் சொந்த வாகனங்களில் ஊருக்கு செல்லும் பொதுமக்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஜிஎஸ்டி சாலையை தவிர்த்து போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க மீஞ்சூர்-வண்டலூர் பைபாஸ் சாலையில் எந்த ஒரு போக்குவரத்து நெரிசலும் இல்லாமல் பயணம் செய்யலாம் எனவும், அதேபோல் மதுரவாயல் - தாம்பரம் பைபாஸ் சாலையிலும் சென்று பெருங்களத்தூரை அடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வழிகள்: அதே நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில் சென்று அங்கிருந்து செங்கல்பட்டை அடைந்து பிறகு அவர்கள் செல்லும் ஊர்களுக்கு விரைவாக சென்று அடையலாம் எனவும் போக்குவரத்து போலீசார் தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முழுவதும் ஜிஎஸ்டி சாலை, பெருங்களத்தூர், வண்டலூர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கனரக வாகனங்களை அனுமதிக்காமல் திருப்பி விடப்படும்'' என்றார்.

கனரக வாகனங்களுக்கு தடை: மேலும், போக்குவரத்து நெரிசல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய தாம்பரம் போக்குவரத்து துணை ஆணையர் சமய் சிங் மீனா கூறுகையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு தாம்பரம் மாநகர காவல் போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு ஜி.எஸ்.டி. சாலையில் கனரக வாகனங்கள் கட்டுப்பாடு விதித்து, வெளிவட்டச் சாலையில் வரும் வாகனங்களை பூந்தமல்லி சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. சாலையில் கனரக வாகனங்களுக்கு வரத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 7 ரோந்து வாகனம், மீட்பு வாகனம் தயார் நிலையில் உள்ளது. தனியார் கிரேன் வண்டலூரில் வைக்கப்பட்டுள்ளது. ஏதேனும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே அகற்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளோம்.

கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரம் வர பொதுமக்கள் மாநகர பேருந்தை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார். போக்குவரத்து நெரிசலை குறைக்க தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல் துறை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தற்போது வரை போக்குவரத்து நெரிசல் இன்றி காணப்படுவதாக கூறினார்.

மேலும், இரும்புலியூர் பெருங்களத்தூரை இணைக்கும் ஜிஎஸ்டி சாலை மேம்பாலம் விரிவாக்க பணிகளை பண்டிகை காலத்திற்கு முன்னதாகவே அரசு செய்து முடித்திருக்க வேண்டும். காலம் தாழ்த்தி இது போன்ற நேரத்தில் பணிகள் மேற்கொள்வதால் தான் கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை வரும் காலங்களில் அரசு சரி செய்ய வேண்டும் என பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு நல சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

Last Updated : 7 hours ago

ABOUT THE AUTHOR

...view details