பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது களத்தூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் உதவியோடு, பள்ளிக் கட்டிடங்களை புனரமைத்தல், வர்ணம் பூசுதல், விளையாட்டு மைதானங்களை சீரமைத்தல், குடிநீர் தொட்டி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு இருந்தார்.
இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் புகழேந்தி என்பவர் "Green School,T.Kalathur" என்ற வாட்ஸ்அப் குரூப் மூலம் 125க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகளை ஒன்றிணைத்துள்ளார். அவர்களுள் பலர் பல்வேறு முன்னணி துறைகளில் பணியாற்றி வருவது கூடுதல் சிறப்பு.
இந்த நிலையில், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) 6 மாணவ - மாணவிகளை தலைநகரம் டெல்லி வரை அழைத்துச் சென்று, மாணவர்களை இன்பத்தில் ஆழ்த்தியுள்ளனர், அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள்.
அந்த வகையில், இந்த அரசுப் பள்ளியின் முன்னாள் மாணவர்களான செல்வன் (செவிசாய் மைய இயக்குநர்) மற்றும் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் பாலசுப்பிரமணியம் என்பவர், இப்பள்ளியில் படிக்கும்போது 10ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.