தென்காசி:தென்காசி மாவட்டம்சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணன் சாமி கோயிலில் கோமதி யானை உள்ளது. இந்த யானை, சங்கர கோமதியம்மன் கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் முக்கிய திருவிழாக்களின் போது, ஊர்வலங்களில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்குவது வழக்கம்.
கடந்த 1997-ஆம் ஆண்டு, தொழிலதிபர் சி.பா.சிவந்தி ஆதித்தனார் இந்த யானையைக் கோயிலுக்கு வழங்கினார். பக்தர்களால் கோமதி என்று செல்லமாக பெயரிடப்பட்ட இந்த யானை நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். இந்த கோமதி யானைக்கு கடந்தாண்டு அக்டோபர் 16ஆம் தேதி அன்று 31வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
பல ஆண்டுகளாக கோயில் நிர்வாகத்தால் பாதுகாக்கப்பட்டு வரும் இந்த கோமதி யானைக்கு, கோடை காலம் நெருங்கி வருவதால் நீச்சல் குளம் கட்ட வேண்டும் என பக்தர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நீச்சல் குளம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.