தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"போதை தரும் மருந்துகளின் ஆன்லைன் விற்பனையை தடை செய்யுங்க" - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்! - DRUGS CONTROL

போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதி உள்ளார்.

சுப்ரியா சாகு, கடிதம்
சுப்ரியா சாகு, கடிதம் (Credits - Supriya Sahu X Page, ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 19, 2024, 8:40 PM IST

சென்னை :போதை தரும் மருந்துகளை ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமாக விற்பனை செய்வதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் சுப்ரியா சாகு கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் சுப்ரியாசாகு மத்திய மருந்து கட்டுப்பாட்டு தலைவர் டாக்டர் ராஜீவ் சிங் ரகுவன்ஷி-க்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "மாணவர்களுக்கும, பொது மக்களுக்கும் போதை மாத்திரைகள் கிடைப்பதை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

போதை மாத்திரைகளை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை, கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருகிறது. அதேநேரத்தல் ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தினால் அதற்கு அடிமையாக்க கூடிய திறன் கொண்ட டேபெண்டடோல் போன்ற வலி நிவாரண மருந்துகள் ஆன்லைன் மூலம் எளிதில் கிடைக்கிறது. தமிழ்நாடு காவல் துறையினரும், மருந்து கட்டுப்பாட்டுத் துறையும் இது குறித்து அறிக்கைகளை அரசுக்கு அளித்துள்ளனர்.

அந்த அறிக்கையில், ஆன்லைன் மூலம் போதை மருந்துகளை குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் வாங்குவதாக தெரிவித்துள்ளனர். இதுபோன்று அடிமைப்படுத்தும் மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் ஆன்லைன் குறித்த விவரங்கள் உண்மையானதாக இல்லாததால் அவர்களை கண்டறிய முடிவதில்லை.

இதையும் படிங்க :போதை காளான் வழக்கு; பரிசோதனை அறிக்கையை தாக்கல் செய்யாத தடய அறிவியல் துறை.. மனுதாரருக்கு ஜாமீன்.!

இதுபோன்ற செயல்பாடுகள் போதை மருந்துகளுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகளை நீர்த்துப் போக வைக்கும் வகையில் உள்ளன. மருந்துக் கட்டுப்பாட்டுத்துறையின் அட்டவணையில் உள்ள ஹெச் மற்றும் ஹெச்1 இல் வகைப்படுத்தப்பட்டுள்ள அந்த மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின்றியோ, பதிவு செய்யப்பட்ட மருந்தாளுநரின் கண்காணிப்பு இல்லாமலோ விற்பனை செய்வது மருந்து கட்டுப்பாட்டு விதிகளை மீறிய செயலாக உள்ளது.

சமுதாயம் மற்றும் பொதுமக்களின் நலனுக்கு அச்சுறுத்தலாகவும் விளங்கி வரும் இந்த சட்டவிரோத விற்பனையை தடுப்பது மாநில அதிகாரிகளுக்கும் பெரும் சவாலாக உள்ளது. எனவே, போதைக்கு அடிமைப்படுத்தும் மருந்துகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதைத் தடுத்து ஒழுங்குமுறைப்படுத்தவும், மக்கள் நலனை காக்கவும், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டுத்துறை முன்வர வேண்டும்.

சட்டவிரோத மருந்து விற்பனை செய்யும் ஆன்லைன் நிறுவனங்களை முடக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை என்பதால், அத்தகைய தளங்களை சமூக நலன் கருதி நிரந்தரமாக முடக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அதில் கூறியுள்ளார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details