திருநெல்வேலி:நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 நடைபெற்றது. இதில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற திமுக உள்ளிட்ட கட்சிகள் 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வி அடைந்தது (கள்ளக்குறிச்சி, விருதுநகர் தவிர).
தேர்தல் முடிவுகளில் தமிழ்நாட்டில் 27 தொகுதிகளில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளோடு சேர்ந்து இரண்டாம் இடத்தை பிடித்தது. மேலும், ஏழு தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். பல தொகுதிகளில் அதிமுக மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்தல் முடிவு அதிமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் சூழ்ச்சியால் அதிமுக வலுவிழந்ததாக ஒரு தரப்பினர் கூறினாலும், கட்சியில் ஒற்றுமை இல்லாததே இந்த தோல்விக்கு காரணம் என அதிமுக நிர்வாகிகள் பலர் கருதுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட பிளவு காரணமாகவே அதிமுக அடுத்தடுத்து தோல்வியைச் சந்திப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஓ.பன்னீர்செல்வம் இந்த கருத்தை முன் வைத்துள்ளார்.