தேனி:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், தேனி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை ஆதரித்து, தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு குழுத் தலைவர் சுப.வீரபாண்டியன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் பரப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், "தாலிக்கு தங்கம் எங்கே என்று கேட்போர், மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை ஆயிரம் வழங்குவதை ஏளனமாகப் பேசுகிறார்கள். தங்கத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், நாம் கற்கக்கூடிய கல்வி வாழ்நாள் முழுவதும் நம்மைப் பாதுகாக்கும்.
இந்த நோக்கத்தின் அடிப்படையில் தான், முதலமைச்சர் ஸ்டாலின் கல்லூரி மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கி வருகிறார். பெண்களுக்கு மாதாமாதம் வழங்கப்படும் உதவித்தொகை குறித்து சிலர் ஏளனமாகப் பேசி வருகிறார்கள். வடநாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் நடிகையாக வளர்ந்து, கோடி கோடியாக பணம் சம்பாதித்த குஷ்புக்கு வேண்டுமானால் ஆயிரம் ரூபாய் பிச்சை காசாக இருக்கலாம்.
ஆனால், அதன் அருமை உழைப்பவர்களுக்குத் தான் தெரியும். ஒரு தாய், தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் தனது மகனுடைய மருந்து, மாத்திரை செலவுக்கு பயன்படுவதாக என்னிடம் கூறி கண் கலங்கினார். இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கேட்கிறார்கள். நாளை இந்தியா கூட்டணியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரை, இங்கிருந்து வெற்றி பெற்று செல்லும் தங்க தமிழ்ச்செல்வன் வாக்களித்து தேர்ந்தெடுப்பதில் முக்கிய நபராகத் திகழ்வார்.
பாஜகவினர் மோடியை பிரதமர் வேட்பாளராக அடையாளம் காட்டுகிறார்கள். ஆனால், எடப்பாடி அணியில் யாரை அடையாளம் காட்டுவார்கள்? ஒருவேளை அவர்களுக்கு ஒரு சில சீட்டுகள் வந்தாலும், இலை பூவை நோக்கித்தான் இருக்கும். பலாப்பழமும் அதே போலத்தான். இலையை விட்டுவிட்டு பலாப்பழத்தை தூக்கிக் கொண்டு ஒருவர் ராமநாதபுரத்தில் திரிகிறார்.
மேலும், தமிழ்நாட்டில் தாமரையை வளர்க்க முடியாது. ஆட்டுக் குட்டியைத் தான் வளர்க்க முடியும். இந்த மண்ணின் மைந்தரான தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்களியுங்கள். ஏதோ ஒரு ஊரில் பிறந்து, எங்கோ வளர்ந்து, வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக தன்னை சிங்கப்பூர் பிரஜை என்று சொல்லிக்கொண்டு, தற்போது இங்கு உங்கள் வீட்டுப் பிள்ளை என்று கூறித் திரியும் தினகரனை புறக்கணியுங்கள்" எனக் கூறினார்.
இதையும் படிங்க:அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் ஆசி பெற்ற திண்டுக்கல் சீனிவாசனின் மகன்! - LOK SABHA ELECTION 2024