மதுரை:நீட் தேர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு, நீட் தேர்வு ரத்து பரிசீலனையில் இல்லை என மத்திய கல்வி இணை அமைச்சர் சுகந்தா மஜூம்தார் கூறினார். மத்திய இணை அமைச்சர் அவ்வாறு கூறுவது கண்டனத்திற்குரியது என மதுரை எம்.பி. சு வெங்கடேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுவதாவது,“நாடாளுமன்றத்தில் நான் உள்ளிட்ட 31 எம்.பிக்கள் எழுப்பி இருந்த கேள்விக்கு (எண் 10/22.07.2024) ஒன்றிய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுகந்தா மஜூம்தார் அளித்துள்ள பதில் நழுவல், மறைத்தல், அராஜகம் என்கிற வகையில் அமைந்துள்ளது.
நீட் நிகழ்வு குறித்து தரவுகள் இல்லை:ஒன்றிய அரசு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவு கடந்த 10 ஆண்டுகளில் நடந்திருப்பது குறித்து கேள்வியெழுப்பினோம். ஆனால் போட்டி தேர்வுகளை வெவ்வேறு அமைப்புகள் பணி நியமனங்கள்காகவும், உயர் கல்வி நிலைய அனுமதிகளுக்காகவும், நடத்தி வருவதால் அது சம்பந்தமான குறிப்பான நிகழ்வுகள் பற்றிய தரவுகளை அரசு பராமரிப்பது இல்லை என்றும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.
அத்தகைய தரவுகளை தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள தேர்வு முகமைகளிடமிருந்து பெற்றுத் தர வேண்டும், என்கிற குறைந்தபட்ச அக்கறை கூட அமைச்சரின் பதிலில் வெளிப்படவில்லை. ஒருவேளை இது போன்ற தவறுகள் முறைகேடுகள் பற்றிய தரவுகளை அந்த முகமைகளை வைத்திருக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. அமைச்சரின் இந்த பதில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள நம்பிக்கை இழப்பை மேலும் அதிகரிப்பதாகவே அமைந்திருக்கிறது.
சிபிஐ விசாணை: நீட் இளங்கலை பட்ட தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் பற்றி எழுப்பிய கேள்விக்கு குறிப்பிட்ட நிகழ்வில் தவறு நடந்திருப்பதை அமைச்சர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். சிபிஐ விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அகில இந்திய அளவில் ரகசியம் மீறப்பட்டு இருப்பதற்கான தரவுகள் இல்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். விசாரணை முடிவதற்கு கூட காத்திருக்காமல் இப்படி அமைச்சர அறிவிப்பது நியாயமானதாக இல்லை.