திருச்சி: மே தினமான இன்று (மே.1) உலக சிலம்ப இளையோர் சம்மேளனத்தின் சார்பில், திருச்சி மாவட்டம் கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில், பல்வேறு சிலம்பக் கூடத்தில் சிலம்பம் பயிற்சி பெற்று வரும் 620 சிலம்ப மாணவர்கள் ஒன்றிணைந்து, காலை 6 மணி முதல் 9.30 மணி வரை இடைவிடாது சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்தனர்.
இந்தச் சாதனை புத்தகப் பார்வையாளர்கள், பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கிட்ஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. இதுகுறித்து மாணவி சுகித்தா கூறுகையில், "உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, இங்கு 600க்கும் மேற்பட்டோர் காலை 6 மணியிலிருந்து 9.30 மணி வரை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளோம்" என்றார்.
மேலும், இதுகுறித்து ஒருங்கிணைப்புக் குழுவில் உள்ள சதீஷ்குமார் கூறுகையில், “அனைவருக்கும் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள். இந்த மைதானத்தில் கிட்ஸ் உலக சாதனை என்ற பெயரில், குழந்தைகளைப் பாதுகாப்போம், பெற்றோர்களைப் போற்றுவோம் என்ற தலைப்பில், குறிப்பாக பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளையும் பாதுகாப்போம் என்ற தலைப்பில் 3 மணி நேரம் 30 நிமிடத்தில் சிலம்பம் நிகழ்த்தி சாதனை படைத்துள்ளனர். இதை, தமிழ்நாடு உலக இளைஞர் சிலம்பம் கூட்டமைப்பு சிறப்பாக நடத்தினர்.