தமிழ்நாடு

tamil nadu

தூத்துக்குடியில் நீட் தேர்வில் குளறுபடி; தேர்வை ரத்து செய்யக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! - NEET question paper issue

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 11, 2024, 7:52 PM IST

Updated : Jun 11, 2024, 9:49 PM IST

NEET Exam issue in Thoothukudi: தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் மிகவும் கடினமான வினாத்தாள் வழங்கப்பட்ட விவகாரத்தில், அம்மாணவர்களுக்கு தனி கட் ஆஃப் வழங்கி, தனி கலந்தாய்வு நடத்த வேண்டி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார்
இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி:கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இதில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அழகர் மற்றும் ஆறுமுகநேரி பகுதியில் உள்ள கமலாவதி ஆகிய பள்ளிகளில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையங்களில் சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுதினர்.

இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கிஷோர் குமார் அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

அந்த மாணவர்களுக்கு மட்டும், மற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளை விட தங்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் முற்றிலும் மாறுபட்டு, மிகவும் கடினமாக இருந்ததாகக் குற்றம் சாட்டினர். மேலும், தங்களுக்கு தனி கட் ஆஃப் மற்றும் தனியாக கலந்தாய்வு நடத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

முன்னதாக, நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக ஹரியானா மாநிலத்தில் குறிப்பிட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்தது, வினாத்தாள் கசிவு உட்பட நீட் தேர்வு குறித்து பல சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, விசாரணை மேற்கொள்ள தேர்வு ஆணையம் குழு ஒன்றை அமைத்தது.

இதையும் படிங்க:நீட் தேர்வு 2024 முடிவு சர்ச்சை: கருணை மதிப்பெண் ஏன்? சுழலும் கேள்விகளுக்கு அரசு விளக்கம்!

இந்நிலையில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் கல்விக் கனவு சிதைக்கப்படுவதாகக் கூறி, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே, அச்சங்கம் மாவட்டச் செயலாளர் கிஷோர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, நீட் தேர்வில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டியும் கோஷங்களை எழுப்பினர். இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கிஷோர் குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், "நீட் தேர்வில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அதிகமாக உள்ளனர். ஆண்டுதோறும் இதில் குளறுபடிகள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முற்றிலும் மாறுபட்டு இருந்துள்ளது. ஒரு வரியில் இருக்கக்கூடிய வினாக்கள் நான்கு வரிகளாகவும், 28 பக்கம் இருக்கக்கூடிய வினாத்தாள் 32 பக்கங்களாகவும் இருந்துள்ளது. ஆகவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தனி கட் ஆஃப் மற்றும் தனிக் கலந்தாய்வு நடத்த வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க:வீடுகளை காலி செய்ய காலக்கெடு.. வேதனையில் மாஞ்சோலை தேயிலைத் தொட்ட தொழிலாளர்கள்!

Last Updated : Jun 11, 2024, 9:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details