திண்டுக்கல்:தமிழ்நாடு முழுவதும் அரசு அதிகாரிகளே மக்களை நேரடியாகச் சந்தித்து மனுக்களைப் பெற்று தீர்வு அளிக்கும் திட்டமான மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுகுடி, கோட்டையூர், ஆவிச்சிபட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கான மனுக்கள் பெறும் மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது.
இந்த திட்டம் திண்டுக்கல் மாவட்ட ஊராட்சி செயலரும், ஊரக வளர்ச்சித்துறை மண்டல அலுவலருமான வீரராகவன், நத்தம் தாசில்தார் சுகந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை, மின்சாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், சிறுகுடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முகாம் நடைபெறுவதால், பள்ளி வேலை நாளான இன்று அரசுப் பள்ளிக்கு விடுமுறை அளித்துவிட்டு மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து சிறுகுடி பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் கூறியதாவது, அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி வேலை நாட்களில் இந்த மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெறுவதால், இப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.