தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"எங்க தாத்தா, அப்பாவுக்கு வழங்கப்பட்ட சாதி சான்றிதழை எங்களுக்குத் தர மறுப்பதா?" 13வது நாளாக தொடரும் சமூக மக்களின் போராட்டம்!

அப்பா, தாத்தா, அம்மாவுக்கு வழங்கிய அதே சாதிச்சான்றிதழ், எங்களுக்கு மட்டும் தர மறுத்தால் என்ன அர்த்தம்? எனக் கூறி, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாதிச் சான்றிதழ் மறுக்கப்பட்ட சமூகத்தினர் போராடி வருகின்றனர்.

போராட்டக்குழுவைச் சேர்ந்த பாண்டியன்
போராட்டக்குழுவைச் சேர்ந்த பாண்டியன் (Credits - ETV Bharat Tamil Nadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

மதுரை :மதுரை மாவட்டம், பரவை அருகே அமைந்துள்ளது சத்தியமூர்த்தி நகர். இங்கு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இம்மக்களுக்கு இரண்டு தலைமுறையாக குறிப்பிட்ட சமூகம் எனும் பெயரில் சாதிச்சான்றிதழ் வழங்கி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அச்சமூகத்தின் அடுத்த தலைமுறையினருக்கு சாதிச்சான்றிதழ் வழங்க மதுரை மாவட்டம் நிர்வாகம் மறுத்துள்ளது.

இதற்காக அவ்வப்போது சத்தியமூர்த்தி நகர் பொதுமக்கள் போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 12 நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், 13வது நாளாக இன்று சமயநல்லூர் அருகே மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு அப்பகுதி மக்களோடு, சாதிச்சான்றிதழ் மறுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் போராடி வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு பள்ளி மாணவி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "எங்களுக்கான சாதிச்சான்றிதழ் கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக எனது தாத்தா, அப்பா, அம்மா ஆகியோருக்கு வழங்கிய அதே சாதிச்சான்றிதழ் தற்போது எங்களுக்கு மறுக்கப்படுவதற்கான காரணம் என்ன? என எங்கள் பகுதி வருவாய் கோட்டாட்சியரிடம், மாவட்ட ஆட்சியரிடமும் கேள்வி எழுப்புகிறோம். ஆனால், இதுவரை முறையான பதில் இல்லை. தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எங்களது கல்வி கேள்விக் குறியாக மாறியுள்ளது.

எங்களின் இந்த நிலை குறித்து கல்வித்துறைக்கு தெரியாதா? இதுவரை எங்களைச் சந்தித்து எங்களது குறைகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் எதுவும் கேட்காதது வருத்தமாக உள்ளது. எனது அப்பா, அம்மா, தாத்தாவுக்கு வழங்கப்பட்ட அதே சாதிச் சான்றிதழை எங்களுக்கும் வழங்குவதில் இவர்களுக்கு என்ன சிக்கல்? இதற்காக ஆன்லைனில் எங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது. பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த பெண் நான். கல்வித்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைப் பெற முடியாத நிலை உள்ளது" என்றார்.

இதையும் படிங்க :"நவக்கிரக சுற்றுலா பேருந்தால் வாழ்வாதாரம் பாதிப்பு" - தனியார் டாக்ஸி டிரைவர்கள் போராட்டம்!

போராட்டக்குழுவைச் சேர்ந்த பாண்டியன் கூறுகையில், "தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக கடந்த 30 ஆண்டுகளாக எங்களுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 15 ஆர்டிஓ, 20 ஆட்சியர்கள் இந்த சான்றிதழை எங்களுக்கு வழங்கியுள்ளனர். இதுபோக மானுடவியல், சமூகவியல் ஆய்வாளர்களும் எங்களைக் குறித்து ஒப்புகைச் சான்று வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை எங்களுக்கு இதே பெயரில் சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வந்த ஆர்டிஓ அதிகாரி, எங்களுடைய கலாச்சாரம், முக அமைப்பு குறிப்பிட்ட சமூகத்துடன் ஒத்துப்போகவில்லை. அனைவரும் வீடு கட்டி நாகரிகமாக வாழ்கிறீர்கள். ஆகையால் நீங்கள் அனைவரும் வேறொரு குறிப்பிட்ட சமூகம் தான் என்று கூறுகிறார். ஆனால் இவை அனைத்தும் வாய்மொழியாகத்தான் கூறப்பட்டு, எங்களுக்கான சாதிச்சான்றிதழ் மறுக்கப்படுகிறது.

முந்தைய தலைமுறைக்கு வழங்கப்பட்ட அதே சாதிச் சான்றிதழை, தற்போது அவர்களின் குழந்தைகளுக்கு வழங்க மறுப்பது நியாயமில்லை. கடந்த 2023ம் ஆண்டு உயர்நீதிமன்ற ஆணையின் படி, தாய், தந்தையர் என்ன சாதியோ அதே அடிப்படையில் அவர்களின் குழந்தைகளுக்கும் அது பொருந்தும் என உள்ளது.

இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதியில் இதேபோன்ற சிக்கலில் 2023ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அங்குள்ள குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வாரிசுகளுக்கு சாதிச் சான்றிதழை அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பெற்றுக் கொடுத்துள்ளார்.

அதனை இங்குள்ள ஆர்டிஓ-விடம் கூறினால், நீதிமன்றத்தில் இதுகுறித்து மேல் முறையீடு செய்யுங்கள் என்கிறார். இவையெல்லாம் தட்டிக் கழிக்கிற வேலையாகும். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிதான் எங்களுக்கு சாதிச் சான்றிதழை வழங்கினார். ஆனால், அவரது மகன் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கும் காலத்தில் எங்களது உரிமை பறிக்கப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. ஆகையால் தமிழக அரசும், முதலமைச்சரும் உரிய கவனம் எடுத்து எங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்' என்றார்.

இதுகுறித்து மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, "கலாச்சாரம் மட்டுமின்றி பல்வேறு வகையிலும் குறிப்பிட்ட சமூகத்தை எந்த விதத்திலும் சத்தியமூர்த்தி நகர் மக்கள் பிரதிபலிக்கவில்லை. ஆகையால் அவர்களுக்கு வேறொரு குறிப்பிட்ட சமூக சாதிச்சான்றிதழ் வழங்க தயாராக உள்ளோம். பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளோம்" என்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details