புதுச்சேரி:புதுச்சேரியிலிருந்து மதகடிப்பட்டு நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. அதில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமான பயணிகள் பயணம் செய்து கொண்டு இருந்தனர்.
இதனால் சில மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளிலும், இன்னும் சிலர் பேருந்தின் மேலே ஏறியும் பயணம் செய்து கொண்டு இருந்தனர். இவை எதையும் பொருட்படுத்தா வண்ணம் நடத்துநர் பயணச் சீட்டுகளை வழங்கிக் கொண்டு இருந்தார் போல் தெரிகிறது.
இவ்வாறாக நிரம்பி வழியும் பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த பேருந்து, வில்லியனூர் தாண்டி அரியூர் தனியார் மருத்துவமனை அருகில் செல்லும் பொழுது, படிக்கட்டில் இருந்த கல்லூரி மாணவர் ஒருவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், மாணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். புதுச்சேரியில் பேருந்துகள் அதிக அளவில் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடாது, சாலை விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறையினர் பல்வேறு எச்சரிக்கை விடுத்திருந்தும், அதனை பின்பற்றாமல் செல்லும் சில பேருந்துகளால் இது போன்ற தவறுகள் நடப்பதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
புதுச்சேரியில் நகரப் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில் அரசுப் பேருந்துகளை விட அதிகளவில் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகளால் அவ்வப்போது பெருமளவில் விபத்து ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credit- ETV Bharat) ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:கோவையில் கொள்ளை.. சிம்லாவில் குதூகலம் - ரவுடி கும்பலை தட்டி தூக்கி மாவு கட்டு போட்ட போலீஸ்!