சென்னை:மாநகராட்சி மற்றும் காவல் துறையினர் இணைந்து கடந்த வியாழக்கிழமை காலை என்.எஸ்.சி போஸ் சாலை பூக்கடை பகுதியில் சட்டவிரோத அகற்றுதல் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், கடைகளை அகற்றுதலின் போது, தன்னுடைய வியாபாரப் பொருட்களை பாதுகாக்கும் முயற்சியில் கீழே விழுந்த சாலையோரப் பெண் வியாபாரி கிருஷ்ணவேணி உயிரிழந்தார்.
இதன் காரணமாக மற்ற சாலையோர வியாபாரிகள் நேற்று சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்வு நடைபெறும் வளாகத்தில் ஒன்று கூடி போலீசாரிடம் நீதி கேட்டனர். அப்போது, ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த சாலையோர பெண் வியாபாரி, “நான் 14 வயதில் இருந்து இங்கு கடை நடத்தி வருகிறேன். தலைமுறை தலைமுறையாக இங்கு பிழைப்பு நடத்தி வரும் எங்களை இங்கிருந்து காலி செய்ய கூறுகின்றனர்.
எங்கள் உயிரே போனாலும் அந்த இடத்தை விட்டு போக மாட்டோம். மாநகராட்சி அதிகாரி கார்த்திக் என்னை தள்ளிவிட்டு, நான் விற்பனைக்கு வைத்திருந்த பழங்களை எடுத்துச்சென்று விட்டார். நீங்கள் காலி செய்யவில்லை என்றால், உங்களை துரத்தி துரத்தி அடிப்போம், நாங்கள் உழைத்து தான் சாப்பிடுகிறோம். அதற்கும் வழியில்லாமல் செய்கின்றனர். தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஆதங்கத்துடன் கூறினார்.
அப்போது தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு பொதுச் செயலாளர் வீ.மகேஸ்வரன் மற்றும் நகர வியாபாரக் குழு உறுப்பினர் கண்ணன் இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். இது தொடர்பாக வீ.மகேஸ்வரன் கூறுகையில், “முறையாக அடையாள அட்டை வாங்கிய தெருவோர வியாபாரிகளை எந்த காரணத்தைக் கொண்டும் தன்னிச்சையாக மாநகராட்சி அகற்றக்கூடாது. ஆனால், நேற்று (ஜூன் 13) அவ்வாறு நடைபெற்றது.