திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மங்களநாயகிபுரம் கிராமத்தில் வெறி நாய் ஒன்று 25 கால்நடைகளைக் கடித்து படுகாயம் அடையச் செய்துள்ளது. இதனால் அந்த கிராம பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், “மங்களநாயகிபுரம் கிராமத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதுகரித்து வருகின்றது.
தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எதும் எடுக்கப்படாத நிலையே இதற்கு காரணம். மேலும், சத்துணவு மையங்களில் மீதமுள்ள உணவுகளை உண்டு வந்த தெரு நாய்கள், பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளதால், உணவு கிடைக்காமல் சாலைகளில் பசியுடன் திரிந்து வருகிறது.
இதனால் தெரு நாய்கள் பொது வெளியில் மேய்ந்து கொண்டிருக்கும் ஆடுகளையும், மாடுகளையும் கடிக்கத் தொடங்கியுள்ளது. இவ்வாறு கடிக்கப்பட்ட மாடுகளில் இருந்து கறக்கப்படும் பால்களை குடிப்பதற்கு அச்சம் எழும் நிலை உருவாகி உள்ளது” என கூறுகின்றனர்.
மேலும், “விடுமுறை நாட்களாக உள்ளதால் குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதற்கு கூட அச்சம் ஏற்படுகிறது. எனவே, இனி இவ்வாறு நடக்காத வகையில் தெருவில் சுற்றித் திரிகின்ற வெறி நாய்களை பிடித்துச் செல்வதுடன், அவற்றிற்கு கருத்தடை செய்ய வேண்டும்” என கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:நாய் கடித்தால் பெயில், மனிதன் தாக்கினால் ஜெயில்! சட்டம் கூறுவது என்ன?