தூத்துக்குடி:சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி என்ற ஒரு கிராமமே இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போயிருக்கும். அது படக்கதை. ஆனால், நிஜத்திலும் இந்திய வரைபடத்திலிருந்து காணாமல் போகும் விளிம்பில் இருக்கிறது ஒரு கிராமம். தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பஞ்சாயத்தில் அமைந்து உள்ளது மீனாட்சிபுரம் என்ற கிராமம்.
மீனாட்சிபுரத்தில் உள்ள இடிந்த வீடுகள் (Credits - ETV Bharat Tamil Nadu) 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை அக்கிராமத்தின் மக்கள்தொகை எண்ணிக்கை ஒன்று. மற்றவர்கள் எல்லாம் எங்கு சென்றார்கள்? ஏன் காலி செய்தார்கள்? தனியாக வசிக்கும் அந்த ஒற்றை மனிதர் யார் என கள நிலவரம் அறிய மீனாட்சிபுரம் கிராமத்துக்குச் சென்றோம்.
திருநெல்வேலி - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது மீனாட்சிபுரம். மீனாட்சிபுரத்துக்கு முன்னதாக இருக்கும் ஊர் செக்காரக்குடி. அங்குகூட மக்கள் கணிசமாக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகிறார்கள். செக்காரக்குடியில் இருந்து மேல செக்காரக்குடி சென்று, அங்கிருந்து மானாவாரி பயிர்களுக்கு இடையே பயணிக்கிறது மீனாட்சிபுரம் சாலை. ஆள் அரவமற்ற தனித்த சாலையில் சென்றால் வந்துவிடுகிறது மீனாட்சிபுரம்.
கந்தசாமி தாத்தா (Credits - ETV Bharat Tamil Nadu) இதற்கு அடுத்து எந்த ஊருக்கும் செல்வதற்கு பாதை கிடையாது. ஆயிரத்தில் ஒருவன் படத்தில், கடைசியாக சோழர்கள் வாழ்ந்த இடத்தை பார்க்கும் போது, சோழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் எஞ்சியிருப்பது போல காட்டப்பட்டிருக்கும். அந்த நினைவு தான் வருகிறது, இந்த கிராமத்தை பார்க்கும் போது. கிராமம் முழுவதும் மயான அமைதி, திரும்பும் திசையெங்கும் கைவிடப்பட்ட வீடுகள், ஆட்கள் இல்லாததால் வீட்டிற்குள்ளும், வாசலிலும் முட்புதர்கள் மண்டிக் கிடக்கின்றன.
பல வீடுகள் அந்தரத்தில் தொங்கி இடியும் நிலையில் உள்ளன. ஒருசில வீடுகள் இடிந்து நொறுங்கிக் கிடக்கின்றன. ஒன்றிரண்டு வீடுகளின் மேற்கூரை இல்லாமல் உயர்ந்து நிற்கிறது. மக்கள் பயன்படுத்திய ஒரு பெரிய ஆட்டு உரல் கிராமத்தின் மையப்பகுதியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. குழந்தைகள் துள்ளித்திரிந்து கல்வி பயின்ற ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தான் கிராமத்தை வரவேற்கிறது.
கந்தசாமி தாத்தாவின் வீடு (Credits - ETV Bharat Tamil Nadu) ஆள் அரவமற்ற வீட்டு கூரைகளில் அமர்ந்திருந்த மயில்கள் நம்ம வண்டி சத்தத்தை கேட்டவுடன் இறக்கை படபடக்க பறந்து போனது. மக்கள் கூடி கண்டுகளித்த பொது தொலைக்காட்சி அறை வெறும் அறையாக காட்சியளிக்கிறது. வாழ்ந்த மக்களின் நினைவுகளை அசை போட்டபடி மவுனியாக நிற்கிறது மீனாட்சிபுரம். ஆனாலும், எஞ்சியிருக்கும் ஒரு மனிதருக்காக இன்னமும் சுவாசித்துக் கொண்டிருக்கிறது மீனாட்சிபுரம்.
கிராமத்தின் கடைசியில் ஒரேயொரு வீடு மட்டும் மனிதர் வசிப்பதற்கான அடையாளங்களை கொண்டு நிற்கிறது. அது ஒன்று தான் மீனாட்சிபுரம் கிராமம் வரைபடத்தில் இன்னமும் நிலைத்திருப்பதற்கு காரணகர்த்தா. அவர்தான் 73 வயதான கந்தசாமி. வீட்டின் வாசலில் தண்ணீர் நிரப்பப்பட்ட வாலி, தலையணையுடன் கூடிய திண்ணை படுக்கை என இருந்தது அந்த தனியொரு ராசகுமாரனின் வீடு.
மீனாட்சிபுரம் பள்ளி (Credits - ETV Bharat Tamil Nadu) பக்கத்து ஊருக்கு போய் தட்டுமுட்டு சாமான் வாங்கிட்டு வருவதாக தனது இருச்சக்கர வாகனத்தில் வந்த கந்தசாமி, வாசலில் அமைந்துள்ள தூணில் இருந்த கயிற்றை கொண்டு வண்டியை கட்டினார். தாக்கோளை கொண்டு வீட்டை திறந்ததும் அவருக்காக காத்திருந்த குட்டி நாய் வாலாட்டி அவரை வரவேற்றது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கந்தசாமி தாத்தாவை சந்தித்தபோது அவர், “சொந்தபந்தங்களோட, சொத்து சுகங்களோட, குழந்தைங்க சிரிப்பு சத்தத்தோட, தினந்தினம் நிறைஞ்ச பண்டிகையோட இருந்த கிராமம் தான் இந்த மீனாட்சிபுரம். சுமார் ஐநூறு வருஷமா மக்கள் வாழ்ந்து வந்துருக்காங்க இங்க. என் தாத்தா, அப்பா, நான் எல்லோருமே இந்த கிராமத்துல பிறந்து வளர்ந்தவங்கதான். சுத்தி இருக்கிற ஏழு கிராமங்களுக்கு மீனாட்சிபுரம் தான், தாய் கிராமம்.
கந்தசாமி தாத்தாவின் வீடு (Credits - ETV Bharat Tamil Nadu) சுமார் 300 குடும்பங்களுக்கு மேல் வாழ்ந்த கிராமம். ஆறேழு வருஷத்துக்கு முன்னாடிவரை கூட, இங்க 150 குடும்பங்கள் இருந்தது. பொங்கல் பண்டிகை சமயம் எங்க கிராமமே களைகட்டும். பொங்கலிட்டு, விளையாட்டு போட்டி, ஆட்டம், பாட்டம் கொண்ட்டாட்டம்னு, அந்த மகிழ்ச்சி குரல் இன்னமும் என் காதுகளில் எதிரொலிக்குது. தீபாவளி பண்டிகைக்கு சொந்தகாரங்க இங்க உள்ளவங்க வீட்டுக்கு வந்து பட்டாசு வெடித்து கொண்டாடிட்டு போவாங்க.
சண்டை, சந்தோஷம், துக்கம், விழா காட்சிகள் என சகலத்தையும் பார்த்த என் கிராமம், இப்ப தனித்தீவா மாறிக்கிடக்குது. மக்கள் எல்லோரும் ஊரை காலி பண்ணதுக்கு காரணம் தண்ணீர் பஞ்சமும், வேலைவாய்ப்பு இல்லாததும் தான். எங்க கிராமம் வானம் பார்த்த பூமி. மழையை நம்பி தான் மக்கள் வாழ்ந்து வந்தாங்க. விவசாயத்தையும், குடிநீரையும் மழை தண்ணீர் தான் பூர்த்தி செஞ்சது. மழை பெய்யலனா ஊர் பஞ்சமாயிடும்.
கந்தசாமி தாத்தா (Credits - ETV Bharat Tamil Nadu) பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மழை ஓரளவு கைகொடுத்து எங்க வாழ்வாதாரம் பரவாயில்லாம இருந்தது. பிறகு ஆண்டுக்கு ஆண்டு மழை கம்மியானது. அதனால விவசாயம் பொய்த்துப் போச்சு. குடிதண்ணீருக்கு அலைஞ்சு திரிஞ்சோம். இங்க இருந்து 5 கி.மீ. நடந்து தண்ணீய சுமந்து கொண்டு வருவோம். பஸ் வசதி கிடையாது. மக்கள் பஞ்சம், பட்டினின்னு ரொம்பவே கஷ்டப்பட்டுப் போனாங்க. அதுல இருந்து ஒருத்தர் ஒருத்தரா ஊரை காலி பண்ண ஆரம்பிச்சாங்க.
சொந்த வீடு வாசல், விவசாய நிலம் எல்லாத்தையும் அப்படி அப்படியே விட்டுட்டு போனவங்கதான். திரும்ப வரவே இல்லை. மழை பெய்ஞ்சு ஊர் செழிப்பானா திரும்ப வந்துரலாம்ன்னு என்ற நம்பிக்கையில் போனவங்ககூட அவங்க நினைச்சது நடக்கவில்லை. மூணு வருஷத்துக்கு முன்னாடி என்னைத் தவிர எல்லோரும் காலி பண்ணிட்டு போயிட்டாங்க. போனவங்க யாரும் திரும்பி எட்டிகூட பார்க்கல. ஒருசிலர் மட்டும் வாரத்துல இருநாள் இங்க இருக்கிற அம்மன் கோயிலுக்கு சாமி கும்பிட வருவாங்க.
இப்போ அதுக்கூட இல்லாமல் வைகாசி திருவிழாவிற்கு வந்து செல்கின்றனர். திருவிழாவின் போது தற்காலிக பந்தல் போட்டு வைப்போம், வந்து இருந்து திருவிழா கொண்டாடிட்டு போனா, அடுத்த வைகாசிக்கு தான் வருவாக என அசைபோடும் கந்தசாமி, மக்கள் போன வரைக்கும் அரசாங்கம் குடி தண்ணீர், சாலை வசதி எதுவும் செய்து தரல. இப்ப போன மக்கள் திரும்ப வரணும் என்கிறதுக்காக, தண்ணீர் தொட்டி, அடி பம்பு, தெருவிளக்கு வசதிகள் செஞ்சு கொடுத்துருக்காங்க.
இதை முன்னாடியே செஞ்சிருந்தா மக்கள் யாரும் ஊரை விட்டு போயிருக்க மாட்டாங்க. இப்ப எல்லாரும் அங்கயும் இங்கயுமா செட்டிலான பிறகு, மறுபடியும் எப்படி வருவாங்க? நிறைய வீடுகள் இடிஞ்சு போயிருச்சு. எஞ்சியிருக்கிற கொஞ்ச வீடுகளும் இடிந்து விழுற நிலையில்தான் இருக்குது. அடிப்படை வசதிகள் செஞ்சு கொடுத்திருந்தாலும் வாழ்வாதாரத்துக்கு வழி வேணுமே. அதுக்கு என்ன பண்ணுவாங்க மக்கள்? 16 வருஷத்துக்கு முன்னாடி என் மனைவி வீரலட்சுமி இறந்து போயிட்டாங்க.
ரெண்டு மகன்கள், ரெண்டு மகள்கள். அதுல ஒரு மகன் மட்டும் அப்பப்போ செலவுக்கு பணம் கொடுத்து உதவுறான். எனக்கு இந்த கிராமத்தை விட்டு பிரிய மனமில்லை. வேற எங்கேயும் போக வழியும் இல்லை. நான் சாகுறதுக்குள்ள போன மக்களில் கொஞ்சம் பேராவது இங்க மீண்டும் குடிபெயர்றத பார்க்கணும். அதைதான் சாமிக்கிட்ட தினந்தினம் வேண்டியிட்டு இருக்கேன். வாழ்க்கைக்கு வழியில்லாத இந்த ஊருக்கு எப்படி வருவார்கள்?. காரு, பைக் சத்தம் கேட்டா அங்கிட்டு திரும்பி பார்ப்பேன். என் உயிர் இங்கு தான் போகனும்னு இங்கிட்டே இருந்துட்டேம்யா” என தெரிவித்து இருந்தார்.
இறுதி நாட்களிலும் மீனாட்சிபுரத்திற்கு யாரும் குடிவந்து விடமாட்டார்களா? என ஏக்கத்துடனேயே இருந்த கந்தசாமி, வயோதிகம் காரணமாக கடந்த 26ஆம் தேதி தனது இறுதி மூச்சை நிறுத்தி கொண்டார். இதனையடுத்து அவரது உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இறுதி யாத்திரையில் நால்வர் சுமந்து செல்ல, மீனாட்சிபுர மண்ணிலேயே அவரது உடலை அடக்கம் செய்தனர். கனவு நிறைவேறாமலேயே காற்றில் கரைந்தார் கந்தசாமி தாத்தா. ஆட்களே இல்லாத கிராமமாக காட்சியளிக்கிறது மீனாட்சிபுரம்.
இதையும் படிங்க:சேவலுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த பாசக்கார உரிமையாளர்.. நெல்லையில் நெகிழ்ச்சி! - PET COCK DEATH BANNER