ஈரோடு:கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள புஞ்சைத்துறையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட டி.என்.பாளையம் வன எல்லையில் ஆதிபெருமாள் கோயில் கரடு என்ற இடத்தில், பெருந்துறை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவரது மனைவி ஈஸ்வரி பெயரில் கல்குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிக்கான உரிமம் கடந்த 2015ஆம் ஆண்டே முடிவுற்ற நிலையில், கடந்த 9 ஆண்டுகளாக சட்டவிரோதமாக இயங்கி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கல்குவாரியில் 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வெடி வைத்து பாறையை உடைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு வேலை செய்த இரு தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்ததை அறிந்த மற்ற தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பியோடியதாகத் தெரிகிறது.
பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பங்களாபுதூர் போலீசார், வெடி விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், வெடி விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கோபி அருகே உள்ள அயலூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார்(50) என்பதும், மற்றொருவர் கர்நாடகா மாநிலம் கர்கேகண்டியைச் சேர்ந்த அஜீத்குமார் என்பதும் தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து இருவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்காகக் கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்துக்குப் பின் தலைமறைவான குவாரி உரிமையாளரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோத கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.