சென்னை: சென்னை இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கலைஞர் 100 ரூபாய் நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டதை அரசியலாகப் பேசுகிறார்கள். பாஜகவும், திமுகவும் எதிரும், புதிருமாக கருத்துக்களுடன் களத்தில் உள்ளது. கருணாநிதிக்கு சிறப்பு நாணயம் வெளியிட்டத்தில் மகிழ்ச்சி அடைகிறோம்.
காமராஜர், அண்ணா, ராதாகிருஷ்ணன், எம்ஜிஆர் ஆகியோருக்கு எல்லாம் நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தை ஆளும் திமுக அரசு சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நாணயம் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில், மத்திய அரசு அதற்கான அனுமதியை வழங்கியது. திமுகவும் - பாஜகவும் ஒரே மேடையில் இருந்ததை அதிமுக பொதுச் செயலாளர் அரசியல் கலந்து பேசுவது வேதனையாக உள்ளது. பாஜக ஆட்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை.
எதிரும், புதிருமாக இருந்தாலும் ஒரு அரசியல் தலைவரை மதிப்பது அரசியல் நாகரிகம். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்னுடைய தனிப்பட்ட விருப்பு, வெறுப்பை கட்சியிடம் சொல்ல முடியாது. நான் கட்சியின் தலைவராக இருந்தாலும், அடிப்படையில் நான் தொண்டன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என மத்திய அரசு முடிவு செய்த பிறகு, மாநில பாஜக முழு ஒத்துழைப்பை கொடுப்பது கடமை. இதில், நாங்கள் அரசியல் கலக்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு விஷயத்தை உணர்த்த விரும்புகிறேன்.
எதிரும், புதிருமாக இருந்தாலும் அரசியல் நாகரிகம் வேண்டும். ஒரு தலைவரை மதிப்பது தான் அரசியல் நாகரிகம். மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களின் விருப்பத்தின்படி கலைஞரின் நினைவிடத்திற்கு சென்றோம். அரசியல் கலக்காமல் பெருந்தன்மையோடு செயல்பட்டுள்ளோம். அரசியல் நாகரிகத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் கட்சியாக பாஜக உள்ளது. சித்தாந்த அடிப்படையில் பாஜகவும், திமுகவும் எதிரும், புதிருமாக பயணம் செய்து கொண்டு வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, ஆட்சி இல்லாத போது ஒரு பேச்சு என பேசுகிறார். ஆட்சியில் இருக்கும்போது மத்திய அரசிடம் நிதிகளை பெற்று மாநில அரசாங்கம் செய்தது என பேசியவர் எடப்பாடி பழனிசாமி.