தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சம வேலைக்கு சம ஊதியம்; பிப்.12 முதல் தொடர் போராட்டம் - இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவிப்பு! - பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம்

Teachers Association protest: திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 311-ஐ நிறைவேற்ற வலியுறுத்தி, வருகிற பிப்ரவரி 12 முதல் தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 4, 2024, 7:01 PM IST

சென்னை:இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறியுள்ளதாவது, “2009, ஜூன் 1-க்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு, கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது, 1.6.2009-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 8,370 ரூபாய் என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு 5,200 ரூபாய் என்றும் ‘ஒரே பணி - ஒரே கல்வி தகுதி’ என இருந்த போதும், இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதை களையக் கோரி கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர், நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண் 311 -இல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்ற எங்கள் கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

புதிய அரசு பதவி ஏற்று இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2023 புத்தாண்டின் முதல் அறிவிப்பாக, போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து, ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது, கல்வித்துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்னை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. 2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகின்றனர். பணி நியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம். ஊதிய முரண்பாட்டை விரைந்து களையக் கோரி சென்ற ஆண்டில் மூன்று கட்ட போராட்டங்களை நடத்தினோம்.

முதல் கட்டமாக ஆகஸ்ட் 13 கோரிக்கை ஆயத்த மாநாடு, சுமார் 6,500 ஆசிரியர்களுக்கு மேல் தமிழகம் முழுவதும் இருந்து கலந்து கொண்டனர். இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 5 முதல் 27 வரை கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் சென்றோம். மூன்றாம் கட்டமாக 2023 செப்டம்பர் 28 முதல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்தினோம்.

அக்டோபர் 6-இல் நடந்த கடைசி கட்ட பேச்சுவார்த்தையில், கண்டிப்பாக மூன்று மாதங்களுக்குள் மூன்று நபர் ஊதியக்குழு அறிக்கை பெற்று, சமவேலைக்கு சம ஊதிய கோரிக்கையை சரி செய்கிறோம் என்ற வார்த்தையும், தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென மனுக்கள் அளித்தும், எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இது வேண்டுமென்றே காலதாமதபடுத்துவதாகவே எண்ண வேண்டியதாக உள்ளது. வாக்குறுதி கொடுத்துவிட்டு அதனை நிறைவேற்றாமல் காலதாமதப்படுத்துவது அரசுக்கு அழகல்ல. எனவே, இன்று திருச்சி சமயபுரத்தில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில், பிப்ரவரி 12 முதல் தமிழ்நாடு முதலமைச்சரும், பள்ளி கல்வித்துறை அமைச்சரும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, தலைநகர் சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்துவது என்றும், மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்துவது என்றும், கோரிக்கை முடியும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஐஐடி வரலாற்றில் முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் கோட்டாவை அறிமுகப்படுத்தும் சென்னை ஐஐடி!

ABOUT THE AUTHOR

...view details