விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே போதைப் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருவதாக மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் கிருஷ்ணன்கோவில் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கிருஷ்ணன்கோவில் பகுதியில் வீடு எடுத்து தங்கி இருந்த இருவரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் சிறு சிறு பொட்டலங்களாக இருந்த 500 கிராம் கஞ்சா, எடை இயந்திரம், இரு செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் ஆந்திர மாநிலம், நெல்லூரைச் சேர்ந்த 20 வயது மாணவர் மற்றும் பீகார் மாநிலம் ஆரோரியா மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது மாணவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க:பெரும்பாக்கத்தில் கஞ்சா, போதைப்பொருட்கள் புழக்கம்? - 1,400 குடியிருப்புகளில் அதிரடி ரெய்டு நடத்திய 300 போலீசார்!
மேலும், இதுகுறித்து போலீசார் கூறுகையில், “மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுபடி கல்வி நிலையங்களில் போதைப்பொருள் விற்பனை தடுப்பு குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே கஞ்சா பழக்கம் அதிகரித்து உள்ளதாக வந்த தகவல் குறித்து விசாரித்த போது, வட மாநிலங்களில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள் அங்கிருந்து கஞ்சா கொண்டு வந்து, மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.
பின்னர் சந்தேகத்திற்குரிய மாணவர்களைக் கண்காணித்து வந்து, இன்று காலை இருவரை கைது செய்துள்ளோம். இவர்கள் இருவரும் அங்குள்ள பல்கலைக்கழகத்தில் பி.டெக் நான்காம் ஆண்டு படித்து வருகின்றனர். அவர்கள் கல்லூரி விடுதியில் தங்காமல், தனியாக வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்” என்றனர்.