மதுரை:திருச்சியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் பிரசாதம் வழங்க வைஷ்ணவ சம்பிரதாயத்தை சார்ந்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் எனவும், கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்ற கோயில் நிர்வாக ஒப்பந்த அறிவிப்பை ரத்து செய்யக்கோரியும் வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தியின் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, "டெண்டர் அறிவிப்பில் வைஷ்ணவ சம்பிரதாயத்தை சார்ந்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும். கோயிலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. வைஷ்ணவ திருக்கோயிலில் 10 ஆண்டுகள் பிரசாத கடை டெண்டர் எடுத்து நடத்தியதற்கான முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுதாரர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தகுதிகள் இருப்பினும் வைஷ்ணவ சமூகத்தைச் சாராதவர் என்பதால் அவரால் ஏலத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. ஆகவே டெண்டர் அறிவிப்பை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளார்" என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் "பிரசாத கடை நடத்துவது, மதத்தின் ஒருங்கிணைந்த பகுதி அல்ல. அது மதச்சார்பற்ற தன்மை கொண்டது. இது மத நடைமுறையின் வரம்பிற்குள் வரவில்லை. ஆனால் வணிக நோக்கில் கோயிலினுள் கடையை நடத்தும் ஒரு நிகழ்வு. ஆகவே டெண்டருக்கான விதிகளை நீக்க வேண்டும்" என வாதிடப்பட்டது
தொடர்ந்து ரங்கநாத சுவாமி திருக்கோயில் தரப்பில், "ஸ்ரீரங்கம் கோயில் ஒரு வைஷ்ணவ கோயில். ஆகவே இங்கு தென்கலை சம்பிரதாயம் பின்பற்றப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, சாதியையோ குறித்த பாகுபாடு இல்லை. ஏற்கனவே நிறுவப்பட்ட பழக்கவழக்கங்களை நீர்த்துப்போகச் செய்யக்கூடாது என்பதற்காகவே அந்த தகுதி வைக்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "கோயில்களில் பிரசாதங்கள் கடவுளின் ஆசீர்வாதமாகக் கருதப்படுகிறது. அந்த நம்பிக்கையிலேயே பக்தர்கள் பிரசாதங்களை பெற்றுச் செல்கின்றனர். ஒவ்வொரு கோயிலும் தங்கள் கோயிலுக்கு என தனித்துவமான பிரசாதங்களை வழங்குகின்றன. இந்து சமய அறநிலையத்துறை பிரசாத கடைகளை, தனி நபர்களுக்கு குத்தகைக்கு விடுகிறது. திருப்பதி லட்டு, பழனி பஞ்சாமிர்தம், அழகர் கோயில் தோசை போன்றவை தனித்துவமான சிறப்பை கொண்டவை.