சென்னை:சென்னையில் மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் பொது இடங்களில் குப்பை, கட்டட கழிவுகளை கொட்டுவது போன்ற சட்டவிரோத விதிமீறல் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது சென்னை மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
68 தீர்மானங்கள்:இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி மாதாந்திர மாமன்ற கூட்டம், மேயர் பிரியா ராஜன் தலைமையில் நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் 68 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி குப்பை கொட்டுவதற்கான அபராதத் தொகை 10 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது விதிக்கப்படு வரும் அபராதத் தொகை, 5 ஆண்டுகள் ஆனதால் அபராதத் தொகையை மறுசீரமைப்பு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- பொது மற்றும் தனியார் இடங்களில் தூக்கி எறியப்படும் குப்பைகள், வாகனங்களில் இருந்து கொட்டப்படும் குப்பைகளுக்கான அபராதத் தொகை 500 ரூபாயில் இருந்தது 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
- தனிநபர் இல்லங்களில் கொட்டப்படும் குப்பைக்கு 100 ரூபாயாக இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் குழு குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பைக்கு 1000 ரூபாயில் இருந்து 5000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
- பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு 5000 ரூபாயாக அபராதம் தொகை உயர்த்தப்பட்டது.
- அங்கீகரிக்கப்படாத பொது இடங்களில் கட்டுமானம் மற்றும் இடிபாடு கழிவுகளை ஒட்டுபவர்களுக்கும், தோட்டக் கழிவுகள், மரக்கழிவுகள் ஆகியவை பொது இடங்களில் கொட்டுபவர்களுக்கும், குப்பைத்தொட்டி, கழிவுநீர் பாதை, கால்வாய், நீர்நிலைகள் ஆகிய பகுதிகளில் குப்பை கொட்டுபவர்களுக்கும் புதிய அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.
- திடக்கழிவுகளை எரிப்பவர்களுக்கான அபராதத் தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
- மீன், வளர்ப்பு பறவைகள், இறைச்சிக் கழிவுகள், தரம் பிரிக்காமல் கொட்டுபவர்களுக்கு அதிகபட்சமாக 5000 ரூபாய் அபராத உயர்த்தப்பட்டுள்ளது.
- சாலைகளில் விற்பனை செய்பவர்களின் அருகே குப்பைத்தொட்டி வைக்காதவர்களுக்கும், குப்பைகளை தரம் பிரிக்காமல் கொட்டினாலும் 2000 ரூபாய் வரை அபராத தொகை உயர்த்தப்பட்டிருக்கிறது.
- பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் சேர்ந்து நடத்தப்படும் நிகழ்ச்சிகள் முடிந்து 12 மணி நேரத்துக்குள் அங்குள்ள குப்பைகளை தூய்மைப்படுத்தாமல் இருந்தால் 5000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த நிலையில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டுபவர்கள், அதனை எரிப்பவர்கள் மீது ஸ்பாட் பைன் (spot fine) வசூலிக்கும் சோதனை முறையை சென்னை மாநகராட்சி இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கியுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்