சென்னை:உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் பிரமாண்ட பொருட்செலவில் கட்டப்பட்டு உள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம், கடந்த ஜன.22ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக நடைபெற்ற சிறப்பு பூஜையில் பிரதமர் மோடி உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனையடுத்து, கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல், காலை 7 மணி முதல் பகல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டது முதல் ஏராளமான தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்களும் அயோத்தியை நோக்கி படையெடுக்கத் துவங்கியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவை இல்லாததால், லக்னோ சென்று, அங்கிருந்து அயோத்தி சென்றனர்.
இதனால் பக்தர்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினார். மேலும், சென்னையில் இருந்து அயோத்திக்கு நேரடியாக விமான சேவை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், அயோத்தி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, சென்னையிலிருந்து விமான சேவையை தொடங்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, சென்னை- அயோத்தி இடையேயான நேரடி விமான சேவை இன்று (பிப்.01) தொடங்கியுள்ளது. இந்த விமான சேவையானது, வாரத்தில் 7 நாள்களும் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 1-இல் இருந்து தினமும் பகல் 12.50 மணிக்கு புறப்படும் இந்த விமானம், மாலை 3.25 மணிக்கு அயோத்தி சென்றடைகிறது.
அதன் பின்பு, அதே விமானம் மாலை 4.10 மணிக்கு அயோத்தியில் புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர்கிறது. இந்த விமானத்தில் நபர் ஒன்றுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.5,810 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வரிகள் தனியாக வசூலிக்கப்படுகிறது. ஆனால், பயணிகள் எண்ணிக்கை டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் நேரம் ஆகியவற்றுக்கு தகுந்தார் போல் குறைந்தபட்ச டிக்கெட் கட்டணங்கள் மாறுபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Budget 2024: வருமான வரி செலுத்துபவர்களுக்கு நிம்மதி! இடைக்கால பட்ஜெட்டில் வரிவிகித அறிவிப்பு என்ன?