மதுரை: அலங்காநல்லூர் அருகே நாளை திறக்கப்படவுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் திறப்பு விழாவை முன்னிட்டு, நேற்று மதுரையின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கீழக்கரை கிராமத்தில் ரூ.44 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தின் திறப்பு விழா, ஜனவரி 24ஆம் தேதியான நாளை நடைபெறவுள்ளது. இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தினை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், மதுரை மாநகரிலுள்ள தமுக்கம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏறு தழுவுதல் அரங்கத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் வாயிலாக கலைச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.