தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அயலக தமிழர்களின் அடுத்த தலைமுறைக்கு மாெழியை கற்றுத் தர திட்டம்! முதல்வரின் அசத்தல் அறிவிப்பு - MK STALIN

பல்வேறு நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மொழி மற்றும் நாட்டுப்புறக் கலைகளை கற்றுத் தருவதற்கான திட்டம் உருவாக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின்
அயலகத் தமிழர் தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் (ETV Bharat Tamilnadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 11:00 PM IST

சென்னை: அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற 'அயலகத் தமிழர் தினம் 2025' தாய்த் தமிழ்நாட்டில் தமிழர் திருவிழாவில், அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் அவர் பேசும்போது, "நான் முதலமைச்சப் ஆனதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா என்று உலகத்தின் எந்தப் பகுதிக்கு சென்றாலும், தாய்மண்ணில் இருக்கும் உணர்வை அயலகத்தில் வாழும் தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினர். இப்போது அதை நினைத்துப் பார்த்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது.

அதிலும், அமெரிக்கப் பயணத்தில் எனக்கு அளித்த வரவேற்பை நினைத்துப் பார்க்கிறேன். இங்கு வந்துள்ள ராம் பிரசாத், .வீரா, சிவா, .பாலா ஆகியோர் அமெரிக்காவில் என் மீது காட்டிய பாச உணர்வை இன்னும் என்னால் மறக்கவே முடியவில்லை.

இங்கு கூடியிருக்கும் பலரின் முன்னோர்கள் நூறு, இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு காரணங்களுக்காக தாய்மண்ணில் இருந்து சென்று இருப்பார்கள். இந்தப் பூமிப்பந்தின் வெவ்வேறு நாடுகளுக்கும் சென்று தங்களின் ஓய்வறியாத உழைப்பு, தியாகம், வியர்வை, கண்ணீர் சிந்தி அந்த நாடுகளை வளர்த்தார்கள். இந்தியா வளமாக வாழ அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி சொல்லவும், அங்கீகாரம் வழங்கவும் தான் நம்முடைய திராவிட மாடல் அரசு அயலகத் தமிழர் நாளைக் கொண்டாடி வருகிறது.நான்காவது ஆண்டாக இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம்.

இதுபோன்ற விருதுகள் மூலம், பண்பாட்டுத் தூதுவர்களை உருவாக்கி, உலகெங்கும் உள்ள தமிழ்ச் சொந்தங்களோடு உறவுப் பாலம் அமைப்போம்! இது எல்லாவற்றையும்விட, என் மனதுக்கு நெருக்கமான ஒரு திட்டம் இருக்கிறது. அதுதான், பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களின் வழித்தோன்றல்களை, தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்து, அவர்களின் வேர்கள் பரவியிருக்கும் கிராமங்களை அடையாளம் காட்டும் “வேர்களைத் தேடி” திட்டம்! தமிழ் மண்ணில் அவர்களின் சொந்தங்களை கண்டுபிடித்து, கண்ணீர் மல்க பாசத்தை கொட்டிய சிலிர்ப்பூட்டும் அனுபவங்களை உருவாக்கியதிட்டம்தான் இது! இன்னும் சொல்லவேண்டும் என்றால், என் அரசியல் வாழ்க்கையில் இந்தத் திட்டம் ஒரு மைல்கல்! திராவிட இயக்கக்
கோட்பாடுகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி, இந்த ‘வேர்களைத் தேடி’ திட்டம்!

இந்தத் திட்டத்தில், இதுவரைக்கும் இரண்டு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு, 157 இளைஞர்கள் தாய் மண்ணுக்கு வந்திருக்கிறார்கள்.அதில் 38 இளைஞர்கள் பயணத்தின் இறுதி நாளான இன்றைக்கு நம்முடைய இந்த அரங்கில் இருக்கிறார்கள்! இந்தப் பயணமும் உறவும் என்றென்றும் தொடரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்!

இந்த இனிய நிகழ்ச்சியில், உங்களுக்கான புதிய திட்டத்தின் அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன். நம் தமிழ் மொழி, நாட்டுபுறக் கலைகள், தமிழ் பண்ணிசைகளை அயலகத்தில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. உங்களின் கோரிக்கைகளை தீர்ப்பது என் கடமை!

நூறு ஆசிரியர்கள் மற்றும் தமிழ்க் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து,இவர்களை அயலக தமிழர்கள் வாழும் பகுதிகளுக்குத் தேவைக்கேற்ப அனுப்ப,ஒரு திட்டம் உருவாக்கப்படும். இந்த பயிற்றுநர்கள், அந்த பகுதியிலிருக்கும் தமிழ்ச் சங்கங்களுடன்இணைந்து, தமிழ் மொழியையும், தமிழ்க் கலைகளையும் 2 ஆண்டுகளுக்கு நேரடிப் பயிற்சி வகுப்புகள் மூலமாக நடத்துவார்கள். இத்திட்டத்துக்கான செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்கும். இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நிகழ்ச்சியின் வாயிலாக
அறிவிக்கிறேன்." என்று முதல்வர் அறிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details