சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக போக்குவரத்துத் துறையின் சார்பில், மேற்கொள்ளப்படும் சிறப்பு ஏற்பாடுகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், வருகிற 28ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படுகிறது. தீபாவளி வியாழக்கிழமை வருவதையொட்டி தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் - கிளாம்பாக்கம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம்-கோயம்பேடு ஆகியவற்றில் இருந்து பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
3 பேருந்து நிலையம்:கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்காக சென்னையிலிருந்து மாதவரம், கே.கே.நகர் பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ், பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய ஐந்து இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 3 இடங்களிலிருந்து மட்டுமே சிறப்பு பேருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகிறது.
சிறப்பு பேருந்துகள்: இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து அக்டோபர் 28 முதல் 30 வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படும் 2 ஆயிரத்து 92 பேருந்துகளுடன், 4 ஆயிரத்து 900 சிறப்பு பேருந்துகள் சேர்ந்து மொத்தமாக 11 ஆயிரத்து 176 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களிலிருந்து 2 ஆயிரத்து 910 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 14 ஆயிரத்தது 86 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.