திருநெல்வேலி:திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசியதாவது, “ சட்டப்பேரவையை நடத்த விடாமல் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரினர். கேள்வி நேரம் முடிந்த பின்னர் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடியும் என்பதை எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தெரிந்தும், அவை நடவடிக்கைகளை நடத்த விடாமல் ஒத்திவைக்க கோரினர்.
எதிர்க்கட்சிகளுக்கு அதிக நேரம்: கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு அதிமுக அதில் கலந்து கொள்ளவில்லை. அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர். தமிழக சட்டப்பேரவையில் அதிகப்படியான நேரம் எதிர்க்கட்சிகளுக்கே வழங்கப்படுகிறது. சபை நடக்கும் நேரத்தில் 60 சதவிகிதம் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அவையில் அமர்ந்து பேச நினைக்கவில்லை. கேள்வி நேரம் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறோம். முதலமைச்சரின் 110 விதியின் கீழ் அறிவிப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது” இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கிடையில் தொடர்ந்து சாதி மோதல் நடந்து வருவது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “பெற்றோர்களால் நடத்தி முடிக்கப்படும் திருமணங்களில் அனைவருக்கும் மனம் ஒத்துப்போகும் நிலை உருவாவதில்லை. எனவே, மாணவர்களிடையே கருத்து மோதல்கள் இருப்பது எதார்த்தம். அதனை சாதிய மோதலாக பார்க்கக்கூடாது.