சென்னை:165 ஆண்டுகள் பழமையான தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் எனும் பெருமைக்குரிய சென்னை பல்கலைக்கழகம், பொது நிதியில் இயங்கும் தமிழ்நாடு அரசுப் பல்கலைக்கழகமாகத் தொடர வேண்டும் எனவும், தமிழக முதலமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, நிதிச் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசு மௌனத்தைக் கலைக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தை காக்க வேண்டும். சென்னை பல்கலைக்கழகத்தில், சில நியமனங்களில் பதவி உயர்வில் முறைகேடு நடந்துள்ளது என்ற காரணத்தைக் காட்டி, அரசு நிதி வழங்குதல் கடந்த பத்தாண்டுகளில் பெருமளவு குறைந்துள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தில் முறைகேடு நடந்திருந்தால், அதைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. தேவைப்படுமேயானால் சட்டப் பேரவையில் விவாதித்து, உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொண்டு, நிர்வாகச் சீர்கேட்டை சரி செய்யலாம். அத்தகைய நடவடிக்கைகளை கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு மேற்கொள்ளாமல், பல்கலைக்கழகம் செயல்படுவதற்கு அரசு வழங்க வேண்டிய நிதியை பெருமளவு குறைத்து வந்துள்ளது.
இதன் விளைவாக, பென்ஷன் நிதி உள்ளிட்ட பல வகையான நிதியை ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் தருவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் பயன்படுத்தி உள்ளது. அரசு தர வேண்டிய நிதியை சரியாக அரசு தந்திருந்தால், இந்த நிதி நிர்வாகச் சிக்கல் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டிருக்காது.
ஆராய்ச்சிக்கு தரப்பட்ட நிதியை சம்பளத்திற்கு வழங்கியதாக தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டி, 'நிர்வாகச் சீர்கேடு' என்று வகைப்படுத்தி, அரசு நிதி வழங்குவதற்கு தணிக்கை அறிக்கை ஆட்சேபணை தெரிவித்துள்ளது. இதை சரிசெய்ய அரசு முற்படாமல், இதை காரணம் காட்டி தனது நிதி ஒதுக்கீட்டை குறைத்துக் கொண்டுள்ளது.
இதன் தொடர் விளைவாக, அரசின் ஒதுக்கீடு பல்கலைக்கழகத்தின் செலவுகளில் பாதிக்கு மேல் இல்லை என்பதால், வருமான வரித்துறை தனது சட்டத்தின்படி பல்கலைக்கழகத்தை 'தனியார்' பல்கலைக்கழகமாக கருதி வரி விதித்துள்ளது. ஆய்வுகள் மேற்கொள்வதற்கும், ஊதியம் தருவதற்கும் நிதி இல்லாத சூழலில், பல்கலைக்கழகம் எவ்வாறு வரி செலுத்த இயலும்?
வரி செலுத்தாத காரணத்தால், பல்கலைக்கழக வங்கிக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் தொடரும் என்றால் பல்கலைக்கழகம் சீர்குலைந்து, மத்திய அரசு தலையிடும் சூழல் உருவாகலாம். பல்கலைக்கழகம் தனியார் கைவசம் செல்லும் சூழல் உருவாகலாம்.