1. விண்வெளி ஆராய்ச்சியின் சில பிரிவுகளில் நூறு சதவீத அந்நிய முதலீடுக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கிறது. இது நேர்மறையாக எத்தகைய மாற்றங்களை இந்த துறையில் ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சமீபத்திய உதாரணங்களிலிருந்து கூட இதற்கு பதிலளிக்கலாம். உலகளாவிய அளவில் கோவிட் காலங்களில் கூட ஒரு துறை முன்னுக்கு வந்தது என்றால், அது விண்வெளி துறையாகத்தான் இருந்தது. கடந்த 65 வருடங்களாக எத்தனை செயற்கைக்கோள்களை விண்ணில் அனுப்பினார்களோ, அதில் கிட்டத்தட்ட 40 சதவீதத்துக்கு அதிகமாக அந்த மூன்று வருடத்தில் அனுப்பப்பட்டிருக்கிறது. முக்கியமாக, அதில் 90 சதவீதத்துக்கு மேல் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் (Space X), ஒன் வெப் (One web) போன்ற தனியார் விண்வெளி நிறுவனங்கள் அனுப்பியுள்ளன.
நம்மை பொறுத்தவரை, அரசுத் துறையாக இருந்தாலும், விண்வெளித் துறையில் பல முற்போக்கான ஆராய்ச்சிகள் நடைபெறுகிறது. நிலவு, செவ்வாய் என பல கோள்களுக்கு செயற்கைக் கோள்களை அனுப்பிக் கொண்டு உள்ளோம். அன்னிய முதலீடு என்பது வர்த்தக ரீதியாக முன்னேற்றத்தை கொடுக்க முடியும் என நம்புகிறேன்.
ஒரு காலத்தில் விமானங்கள் என்பது விமானப் படைக்காக வந்தாலும், மனிதர்களுடைய பயன்பாடுகளுக்கும், பொருட்களை கொண்டு போக வர்த்தக ரீதியாகவும் மாற்றம் அடைந்தன. கிட்டத்தட்ட இதே நிலைமை விண்வெளித் துறையிலும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. இதில் மற்ற நாடுகள் முன்னிலையில் இருக்கும்போது, இந்தியா பின்தங்க முடியாது. வெளிநாட்டு முதலீடு வரும்போது இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. தொழில்நுட்ப ரீதியாக இந்தியர்களின் பங்களிப்பு அதிகரிக்கும். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்திலும் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது, வர்த்தக ரீதியான முதலீடுகள் கிடைக்கும்போது, விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல இந்த புதிய ஏவுதளமும் உதவும் என நான் நம்புகிறேன்.
2. விண்வெளி ஆராய்ச்சி அறிவியல் என்பதைத் தாண்டி, நாட்டின் பாதுகாப்பு தொடர்புடையது. அரசின் தலையீடு இல்லாமல், தானாகவே அந்நிய முதலீட்டை அனுமதிப்பது பிரச்சனை ஆகாதா?
இது சவாலான ஒன்றுதான். ஒரு காலத்தில் செல்போன்கள் எப்படி இருந்ததோ, கிட்டத்தட்ட அப்படித்தான் இதுவும். தேசிய அளவிலான ஆராய்ச்சிக்கு உதவும் அதே நேரத்தில், தனிமனிதனுக்கும் உபயோகமாக இருக்கும். சமீப காலமாக வலம் வரும் ஆளில்லா விமானங்களும் (Drones) அதில் அடங்கும். இவற்றை முறைப்படுத்த வேண்டிய, ஒழுங்குபடுத்த வேண்டிய அவசியம் கண்டிப்பாக அரசிற்கு இருக்கிறது. நிறைய உற்பத்தி செய்ய வேண்டும் என்ற நிலை வரும்போது, புதிய யுக்திகள், தொழில்நுட்பங்கள் தானாகவே கிடைக்கும்.
உலக நாடுகள் முன்னோக்கி போகும்போது நாம் பின்தங்கி இருக்க முடியாது. செல்போன்கள், விமான போக்குவரத்தை எப்படி முறைப்படுத்தினார்களோ, அதேபோன்று இவற்றையும் முறைப்படுத்த முடியும் என நினைக்கிறேன். விவசாயத்துக்கு பயன்படும் டிரோன்கள் ராணுவத்துக்கும் பயன்படுவதில் ஆச்சரியம் இல்லையே? தற்போதைய காலத்தில் அனைத்து முதலீடுகளையும், வளர்ச்சியையும் அரசு மட்டுமே செய்ய முடியாது, தனியார் பங்களிப்பும் அவசியமாகும். வெளிநாட்டு முதலீடு என்பது வெறும் அந்நிய நிறுவனங்கள் மட்டும் கிடையாது, ஏராளமான இந்தியர்கள் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள், அவர்களுடைய பணம்கூட வரலாம்.
3. விண்வெளி துறை மற்றும் அதை சார்ந்த ஆராய்ச்சித் துறையில் சாதிக்க வேண்டும் என நினைக்கும் மாணவர்கள் என்ன படித்தால், அவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு கிடைக்கும்?
இளங்கலை பி.டெக் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்யூட்டர் சயின்ஸ் படிப்பவர்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. முதுகலையில் ஏரோநாட்டிகல், ஏரோ ஸ்பேஸ் போன்ற படிப்புகளை படித்தால் வாய்ப்புகள் இருக்கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளிக்கழகம் நடத்தும் Indian institute of Space Science and technology-இல் படித்தால் சிறப்பான வாய்ப்புகள் இருக்கிறது. படிப்பு முடிந்தவுடன் அரசு அல்லது தனியார் விண்வெளி துறையில் வேலை பெறலாம். அதில், சிறப்பாக செயல்பட்டால் உயர்கட்ட படிப்பிற்காக நாசாவின் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குகிறார்கள்.
4. மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் எந்த நிலையில் உள்ளது மற்றும் மகேந்திரகிரியில் க்ரையோஜெனிக் இயந்திரத்தின் சோதனையில் Human Test தேர்வை நிறைவு செய்திருக்கிறது என கூறுகிறார்கள். எப்போது ககன்யானை நாம் எதிர்பார்க்கலாம்?
ககன்யான் திட்டத்தில் கடைசி கட்டத்தில்தான் கிரையோஜனிக் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. சமீபத்திய சந்திரயான் 3 திட்டதில்கூட அதனுடைய சோதனைகள் மனிதர்களை அனுப்பும் தரத்துடனேயே (Human Rated) அணுகப்பட்டன. ககன்யானை அனுப்பக்கூடிய எந்திரங்கள் மனிதன் பயணிக்ககூடிய தரத்துடன் இருக்கும். பயணத்தின் எந்த ஒரு கட்டத்திலும் சிறிய மாறுதல் ஏற்பட்டாலும், அதில் பயணிக்கக்கூடிய மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்ககூடாது என்பதற்காக பல வரைமுறைகள் இருக்கிறது. ஏவுகலம் பயணிக்கும்போது வெளிப்புற சீதோஷண மாறுதல்களாலோ அல்லது எரிபொருளில் ஏற்படும் சிறிய மாறுதலினாலோ, பணியில் தொய்வு ஏற்படக் கூடாது. க்ரையோஜனிக் 30 வகைகளுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதில் இறுதிகட்ட பரிசோதனையில் கிரையோஜனிக் எந்திரம் மனிதர்களை அழைத்துச் செல்ல தகுதி பெற்றுள்ளது. தனித்தனியாக செய்யப்படும் சோதனைகளை ஒன்றாக சேர்த்து ஏவி பார்த்தால்தான் நிர்ணயம் செய்ய முடியும். இந்த வருட இறுதிக்குள் ஆளில்லா கலன் ஒன்றில் Vyomithra எனும் பெண் எந்திர ரோபோவை (Humanoid Robot) வைத்து பரிசோதனை செய்யப்படும். அதில் வரும் முடிவுகளை வைத்து மனிதர்களை அனுப்பும் முயற்சி எடுக்கப்படும். கலனில் உள்ள காற்றழுத்தம், வெப்பநிலை போன்றவை ரோபோ மீது எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்துகிறது? இதற்கு பதிலாக மனிதர்கள் பயணிக்கும்போது, அவர்கள் எத்தகைய சவால்களை எதிர்கொள்ள நேரிடும் போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கக் கூடியதாக இந்த சோதனை இருக்கும்.
5. விண்வெளி துறையில் முன்னதாகவே AI செயல்பட்டு வருகிறதா அல்லது இனிதான் வரப்போகிறதா? அதன் தாக்கம் எப்படி இருக்கிறது?
கணினி, செல்போன் போன்ற தொழிநுட்பங்கள் முதலில் விண்வெளி துறைக்குதான் வந்தது. அதற்கு பின்தான் வர்த்தக ரீதியாக நடைமுறைக்கு வந்தது. AI தொழில்நுட்பம் மங்கள்யான் அனுப்பப்பட்ட காலங்களில் இருந்தே இருக்கிறது. மங்கள்யான் கலம் செவ்வாய் கோளை நெருங்கும்போது, அங்கிருந்து அனுப்பப்படும் தகவல்கள் நமக்கு கிடைக்க 20 நிமிடங்கள் ஆகலாம். நாமும் பதில் கட்டளை கொடுத்தால், அதற்கும் 20 நிமிடம் ஆகும். இதனால் தகவல் தொடர்பு சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக நடைபெறும். ந்த நேரங்களில் பூமியிலிருந்து மனிதன் கொடுக்கும் கட்டளையை பின்பற்றி நடக்க முடியாது. கடைசி கட்டமாக, செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையை அடையும்போது, செவ்வாயின் மறுபுறத்தில் இருக்கும். இந்த நேரத்தில் அது தானாகவே தனது நிலையை புரிந்து கொண்டு, வேகத்தை குறைத்து செவ்வாயின் சுற்றுவட்டப்பாதையில், செவ்வாயின் ஈர்ப்பு விசைக்குள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளும். அதனால், அதுவாகவே செயல்படுவதற்கு செயற்கை நுண்ணறிவு புகுத்தப்பட்டுள்ளது.
இதே போன்று, சந்திரயான் திட்டத்திலும் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் போன்றவை தானாகவே இயங்குவதற்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது. செயற்கைக்கோள்கள் தயாரிப்பு நிலையின் போது, இவை அனைத்தும் சரியாக இயங்குகின்றனவா என்பதை இதுவரையிலும் மனிதர்கள் கண்காணித்து வந்தனர். மனிதர்களின் திறனைத் தாண்டும் அளவுக்கு ஏராளமான செயற்கைக் கோள்கள் வரும்போது, சில நேரங்களில் தவறுகள் நடக்க வாய்ப்பு இருக்கிறது.