திருநெல்வேலி:திருநெல்வேலி சந்திப்பு(Tirunelveli Junction) ரயில் நிலையம் தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களுக்கான தரவரிசை பட்டியலில் ரூ.100 கோடிக்கு அதிகமாக வருவாய் ஈட்டும் NSG 2 பிரிவுக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஓராண்டில் 138 கோடி வருவாய் ஈட்டியுள்ளதுடன் 47 லட்சம் பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
2023-2024-ஆம் ஆண்டுக்கான ரயில் நிலையங்களின் தரவரிசை பட்டியலை இந்திய ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. இதன் அடிப்படையில் தெற்கு ரயில்வே தமிழகத்தின் உள்ள ரயில் நிலையங்களின் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலுடன், பயணிகள் ரயில் நிலையத்தை பயன்படுத்திய எண்ணிக்கை வருவாய் ஆகியவையுடன் கூடிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், முதல் இடத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையமும், இரண்டாவது இடத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையமும் உள்ளது எட்டாவது இடத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையமும் இடம் பிடித்துள்ளன. ஏற்கனவே திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் புறநகர் அல்லாத குழுவின் மூன்றாவது பிரிவில் இருந்த சூழலில் ரூ.138.38 கோடி வருவாய் ஈட்டியது. இந்நிலையில் தற்போது புறநகர் அல்லாத குழுவின் இரண்டாவது பிரிவுக்கு முன்னேறி உள்ளது.
இதையும் படிங்க:ஒரே குடும்பத்தில் டாக்டராகும் அக்கா, தம்பி..திருநெல்வேலி அரசுப் பள்ளி மாணவர்கள் சாதித்தது எப்படி?
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் தென்னகத்தின் மிகப்பெரிய ரயில் நிலையமாக உள்ள சூழலில் நாளொன்றுக்கு 84-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் இந்த ரயில்களை முன்பதிவு செய்த பயணிகள் 17 லட்சத்து 12 ஆயிரத்து 347 பேரும் முன்பதிவு செய்யாத பயணிகள் 30 லட்சத்து 65 ஆயிரத்து 835 பயணிகளும் பயன்படுத்தி உள்ளனர்.
மொத்தமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை 2023 -2024 ஆம் ஆண்டில் 47 லட்சத்து 78 ஆயிரத்து 182 பேர் பயன்படுத்தி உள்ளனர். இது தவிர முன்பதிவு செய்த பயணிகள் மூலம் 113 கோடியே 75 லட்சத்து 88 ஆயிரத்து 907 ரூபாயும் முன்பதிவு செய்யாமல் ரயிலில் பயணித்த பயணிகளின் மூலம் வருவாயாக 24 கோடியே 62 லட்சத்து 74 ஆயிரத்து 837 ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. மொத்தமாக 2023 -2024 ஆண்டு நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை பயன்படுத்திய பயணிகளின் மூலம் மொத்தமாக 138 கோடியே 38 லட்சத்து 63 ஆயிரத்து 744 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புறநகர் அல்லாத குழு ரயில் நிலையங்கள், புறநகர் குழு ரயில் நிலையங்கள் மற்றும் இருப்பு குழு ரயில் நிலையங்கள் என மூன்று வகைகளாக ரயில் நிலையங்கள் தரம் பிரிக்கப்படுகிறது. இதில் புறநகர் அல்லாத குழு ரயில் நிலையத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.