விழுப்புரம்:திருச்சி முதல் விருத்தாசலம் வரை உள்ள பயணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டிக்க வேண்டும் எனத் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தார். இந்த நிலையில், திருச்சியில் நடைபெற்ற எம்பிக்கள் கூட்டத்தில் பொது மேலாளரிடம் தனிப்பட்ட முறையிலும் இதை எடுத்துக் கூறியுள்ளார். அதன் விளைவாக எதிர்வரும் மே 2ஆம் தேதி முதல் திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயிலை விழுப்புரம் வரை நீட்டித்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது, இதற்காக விழுப்புரம் பகுதி மக்கள் சார்பில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமார் தனது நன்றியை "திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயில் விழுப்புரம் வரை நீட்டிப்பு, எனது நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி" என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இத்துடன் மேலும் 5 ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் நலன் கருதி நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ரயில்களின் சேவை மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் அமலுக்கு வரும் என ரயில்வே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"திருச்சி - விருத்தாசலம் பயணிகள் ரயில் விழுப்புரம் (வ.எண்.06892) வரை நீட்டிப்பு: அதாவது, மாலை 6 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு விருத்தாசலம் வந்தடையும் இந்த ரயில் உளுந்தூர்பேட்டை, பரிக்கல், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய ரயில் நிறுத்தங்களில் நின்று இரவு 10.30 மணிக்கு விழுப்புரம் வந்து சேரும். பின்னர், (வ.எண்.06891) மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே வழியில் காலை 9 மணிக்கு திருச்சி சென்றடையும்.
விழுப்புரம் - மயிலாடுதுறை வரை செல்லக்கூடிய விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண்-06877) திருவாரூர் வரை நீட்டிப்பு: அதாவது, விழுப்புரத்திலிருந்து மாலை 6.25 மணிக்குப் புறப்பட்டும் இந்த ரயிலானது, இரவு 10.45 மணிக்கு திருவாரூர் சென்றடையும். மறுமார்க்கமாக, மே 3ஆம் தேதி முதல் திருவாரூரில் இருந்து தினமும் காலை 5.10 மணிக்குப் புறப்படும் திருவாரூர் - விழுப்புரம் பயணிகள் ரயில் ( வ.எண்.06690 ) பேரளம், பூந்தோட்டம், நன்னிலம் ரயில் நிலையங்களில் நின்று விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு காலை 9.15 மணிக்கு வந்தடையும்.
சென்னை கடற்கரை - வேலூர் கண்டோன்மென்ட் பயணிகள் ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு: மே 2ஆம் தேதி முதல், சென்னை கடற்கரையிலிருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் (வ.எண்.06033) இந்த ரயில் வேலூர் கண்டோன்மென்ட்டுக்கு இரவு 9.35 மணிக்கு வந்தடைந்து, பின்னர் திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும்.