சென்னை:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்.19ல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், கட்சி நிர்வாகிகளும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில்,தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிண்டி ரேஸ்கோர்ஸ், சின்னமலை, வெங்கடப்புரம் ஆகியப் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அவருக்கு பொதுமக்கள் மற்றும் அதிமுக, கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் இடையே ஈடிவி பாரத் ஊடகத்திற்கு தென் சென்னை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ஜெயவர்த்தன் சிறப்பு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி முழுவதும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், தேமுதிக, எஸ்டிபிஐ கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம்.
மக்கள் தெளிவாக இருக்கின்றனர்: சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று பிரச்சாரம் செய்தோம். பிரச்சாரத்திற்கு செல்லும் பொழுது மக்களும், குறிப்பாக பெண்கள் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என தெள்ளத் தெளிவாக இருக்கின்றனர். ஒவ்வொரு குடும்பத்திலும் விடியா திமுக அரசு, அவர்களின் ஒட்டுமொத்த சேமிப்பை திருடும் அரசாக இருக்கிறது.
2021 ஆம் ஆண்டின் விலைவாசியையும் தற்பொழுது உள்ள விலைவாசி உயர்வையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர். பருப்பு உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் இரண்டரை மடங்கு விலை உயர்ந்துள்ளது. திமுக அரசால் மக்கள் அன்றாடம் வாழ்க்கை நடத்தும் சூழ்நிலை கஷ்டமாக உள்ளது. மக்கள் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வரக்கூடிய மின்சார கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது என தவித்துக் கொண்டுள்ளனர்.
2000 ரூபாய் வந்த மின்சார கட்டணம் தற்போது 5000 ரூபாய் என வருகிறது. தண்ணீர் கட்டணம், கழிவு நீர் கட்டணம், சொத்துவரி போன்றவற்றையும் உயர்த்தி உள்ளனர். சட்டம் ஒழுங்கை பொறுத்த வரை மாநிலத்தில் சீர்கெட்டு உள்ளது. எங்கு பார்த்தாலும் எதிர்காலத்தில் இளைஞர்கள் பாதிக்க கூடிய வகையில் போதை வஸ்துக்கள் கிடைக்கிறது. போதை வஸ்துகளை சப்ளை செய்யக்கூடிய மாபியாக்கள் திமுக குடும்பத்துடன் நெருக்கமாக உள்ளனர் என்பதையும் மக்கள் நன்றாக உணர்ந்து உள்ளனர்.
மகளிர்கள் குடும்பத்தை நடத்துவதற்கு சிரமப்படக்கூடிய நிலையும், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் இந்த அரசாங்கத்தின் செயல்பாடு இருப்பதால் திமுக அரசு மற்றும் ஸ்டாலினுக்கு எதிராக மிகப்பெரிய அலை இருக்கிறது. மக்கள் அதிமுக மற்றும் கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். ஒரு திட்டத்தை திமுக செயல்படுத்துவது போல் செயல்படுத்தி அதனைத் தொடர்ந்து மக்களிடம் இருந்து பணத்தை எடுக்கும் வேலை செய்கிறது.
ஒரு வீட்டில் இருக்கக்கூடிய சேமிப்புகளை அழித்து முடித்துவிட்டு வாழ்க்கை நடத்த முடியாத அளவிற்கு செய்துள்ளது திமுக அரசு. பெண்கள் வெளியில் செல்வதற்கும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. ஒரு தனி குடும்பத்தின் சேமிப்பை பறித்து விட்டு எந்த திட்டத்தை செயல்படுத்த போகிறார்கள். வாழ்க்கை நடத்துவதற்கு அமைதியான சூழ்நிலையும் குடும்பத்தில் சேமிப்பும் இருக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு மக்களுக்கு எதிரான நேர் மாதிரியான செயல்பாடுகளை திமுக அரசு செய்கிறது.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர் திமுக எம்.பி:தென் சென்னை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தமிழச்சி தங்கப்பாண்டியனை பொருத்தவரை தொடர்ந்து பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து செயல்பட கூடியவர். பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே என கூறுவது அவருக்கு தெள்ளத் தெளிவாக பொருந்தும். அதிமுக ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தை முடக்குகின்ற நாடாளுமன்ற உறுப்பினர் என அவரின் பெயரை மாற்றிக் கொள்ளலாம்.