சென்னை:தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக.16) தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக்கூட்டத்தில் 72 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அந்த வகையில், கடந்த 10 தேர்தல்களில் வெற்றியைத் தேடித் தந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தும், செப்டம்பர் 17ம் தேதியன்று சென்னையில் முப்பெரும் விழா கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவும், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும் அதே சமயம் நிதிப்பகிர்வில் தமிழ்நாட்டுக்கு வஞ்சனை காட்டிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 27ஆம் தேதி அமெரிக்க செல்லும் சூழலில், இன்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. குறிப்பாக, அமைச்சர் உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு இருப்பதாக நீண்ட நாட்களாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் இன்று நடந்த கூட்டத்திற்கு மத்தியில் மூன்று துணை முதல்வர்களை நியமிக்க மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணத்தையொட்டி ஆட்சியை கவனித்துக் கொள்ளும் விதமாக அமைச்சர்கள் துரைமுருகன், ஐ. பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட மூன்று பேரை துணை முதலமைச்சராக நியமிக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
முதல்வர் வரும் 27ஆம் தேதி அமெரிக்க செல்ல உள்ள நிலையில், ஆகஸ்ட் 22ஆம் தேதி துணை முதலமைச்சர்களை நியமிக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, இன்று நடந்த கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குகள் குறைவாக வாக்குகள் பெற்ற விருதுநகர், விழுப்புரம் உள்ளிட்ட நாடாளுமன்ற தொகுதிகளின் பொறுப்பாளர்கள், மாவட்ட மாவட்ட செயலாளர்களை முதல்வர் ஸ்டாலின் கடிந்துகொண்டதாகவும், கட்சி கவுன்சிலர்கள் யாராவது தவறு செய்தால் அவர்கள் மீது பதவிப்பறிப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:"அமெரிக்கா போனாலும் கட்சி, ஆட்சியை கவனித்து கொண்டுதான் இருப்பேன்" - ஸ்டாலின் எச்சரிக்கை!