தென்காசி: 18வது மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, ஏழு கட்டமாக நாடு முழுவதும் நடைபெறுகிறது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில்ம் தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதியில், திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் போட்டியிட உள்ளார் என்ற பிரத்யேக தகவல் ஈடிவி பாரத் ஊடகத்திற்கு கிடைத்துள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தனுஷ் குமார், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் போட்டியிட்ட நிலையில், திமுக வேட்பாளர் தனுஷ் குமார் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் தனுஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக சங்கரன்கோவிலைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு தனுஷ் குமார், டாக்டர் ராணி ஸ்ரீகுமார், சங்கரன்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்துச்செல்வி உள்ளிட்டோர் விருப்ப மனு அளித்திருந்த நிலையில், இரண்டாவது முறையாக தனுஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக நேற்று வரை தகவல் வெளியாகி வந்த நிலையில், திமுக துணை பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, பெண்களுக்கு குறிப்பிட்ட சில தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்து, அதன் அடிப்படையில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியை கேட்டு பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த தென்காசி மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனும் போட்டியிடுவார்கள் என தகவல் வெளியாகி உள்ள நிலையில், இரண்டு கட்சித் தலைவர்களுக்கு மத்தியில் திமுக சார்பில் டாக்டர் ராணி ஸ்ரீ குமார் போட்டியிட உள்ள தகவல் தற்போது பிரத்யேகமாக கிடைத்துள்ளது.
யார் இந்த மருத்துவர் ராணி ஸ்ரீ குமார்? டாக்டர் ராணி ஸ்ரீ குமார் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். ராணி ஸ்ரீ குமாரின் தாத்தா பி.துரைராஜ். இவர் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பிலும், 1980ஆம் ஆண்டு அதிமுக சார்பிலும் போட்டியிட்டு, சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அண்ணாமலையா? பழனிசாமியா? 2024 தேர்தலின் நாயகன் யார்?