சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். இதனைத்தொடர்ந்து கடந்த மாதம், தவெக கட்சி கொடியையும், கட்சி பாடலையும் தலைவர் விஜய் அறிமுகப்படித்தினார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு இருக்கும் எனவும் தங்கள் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகள் குறித்து முறையாக முதல் அரசியல் மாநாட்டில் அறிவிக்கப்படும் என கூறியிருந்தார்.
விஜய்யின் மாநாடு எப்போது நடைபெறும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் தவெக முதல் அரசியல் மாநாட்டை மதுரை, திருச்சி, ஈரோடு அல்லது சேலம் ஆகிய மாநகரங்களில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு அதற்கு அனுமதி வழங்க காவல்துறையிடம் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விண்ணப்பித்திருந்தனர்.
ஆனால், அப்பகுதிகளில் நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படாத காரணத்தால், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வி.சாலையில் மாநாடு நடத்துவதற்கு கடந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனுமதி கோரி மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விக்கிரவாண்டியில் வரும் செப்டம்பர் 23ஆம் தேதி தவெக கட்சி முதல் மாநாட்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி தவெக மாநாடு வரும் செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறாது எனவும், தவெக முதல் மாநாடு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தவெக மாநாடு குறித்து கட்சித் தலைவர் விஜய் முக்கிய நிர்வாகிகளுடன் இன்று தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தியுள்ளதாக தெரிகிறது.