மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி 2022ஆம் ஆண்டு முனைவர் ஜெ.குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் 11 மாதங்கள் உள்ள நிலையில் தற்போது தன்னுடைய பணிவிலகல் கடிதத்தை தமிழக ஆளுநருக்கு அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நிலையில், பல்கலைக்கழக ஊழியர்களும், பேராசிரியர்களும், முன்னாள் ஊழியர்கள் மற்றும் பேராசிரியர்களும் தங்களது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அவ்வப்போது, தமிழக அரசு தற்காலிகமாக நிதி வழங்கி சமாளித்து வரும் நிலையில், பல்கலைக்கழகம் தட்டு தடுமாறி தொடர்ந்து இயங்கி வருகிறது. தொடர்ந்து நீடித்து வரும் நிதி சிக்கல் காரணமாக பல்கலைக்கழகத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகத்தில் தற்போது பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள நிர்ணயம் குறித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ள நிலையில், தமிழக உயர்கல்வித்துறையும் போதுமான நிதி ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றத்தைக் காரணம் காட்டி செய்யாததாலும், கடுமையான நிதி பற்றாக்குறையில் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தவித்து வருகிறது.